அகமதாபாத்தில் நடைபெற்ற 2026 ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில், நியூஸிலாந்தை 96 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி கோப்பையைத் தக்கவைத்தது. இந்த வெற்றி, இந்திய கிரிக்கெட் அமைப்பின் சிறப்பிற்குச் சான்றாகப் பார்க்கப்படுகிறது. இந்த வெற்றியைக் கொண்டாடும் அதே வேளையில், பாகிஸ்தான் கிரிக்கெட் வட்டாரத்தில் கடும் அதிருப்தி நிலவுகிறது.
அதாவது இந்த வெற்றியைக் குறித்துப் பேசிய பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் அஹமது ஷேசாத், இந்திய அணியை மனம் திறந்து பாராட்டியுள்ளார். பாகிஸ்தான் தொலைக்காட்சியின் ‘ஹார்னா மனா ஹை’ நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:
“நாங்கள் (பாகிஸ்தான்) விளையாடியிருந்தால், 180 ரன்களையே பெரிய இலக்காகக் கருதி திருப்தி அடைந்திருப்போம். ஆனால், இந்தியா 250 ரன்களை எட்டத் துணிகிறது. பாகிஸ்தானில் திறமைக்குக் குறைவில்லை, ஆனால் எங்கள் அமைப்பில் பெரும் குறை உள்ளது. இந்தியாவில் திறமையும், அதை வளர்க்கும் முறையான கட்டமைப்பும் உள்ளது. இதனால்தான் அவர்களால் சஞ்சு சாம்சன், இஷான் கிஷன் போன்ற சிறந்த வீரர்களை உருவாக்க முடிகிறது,” என்று கூறினார்.
🚨 Ahmed Shehzad takes a BRUTAL dig at Pakistan after India’s world cup triumph
“India is at the top because they prepare themselves against top teams. Pakistan, on the other hand, is content with playing Zimbabwe, Uganda, and Kenya. In fact, I think we should have new rankings… pic.twitter.com/tLkgcMSMZr
— Brutal Truth (@sarkarstix) March 8, 2026
இந்திய அணியின் தேர்வைச் சுட்டிக்காட்டிய ஷேசாத், “தொடர்ந்து வாய்ப்பு கிடைக்காத சஞ்சு சாம்சன், இந்த உலகக் கோப்பையின் தொடர் நாயகனாக உருவெடுத்துள்ளார். அதேபோல, ஒழுக்கத்தின் காரணமாக ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த இஷான் கிஷன், உள்நாட்டுப் போட்டிகளில் சிறப்பாகச் செயல்பட்டு மீண்டும் அணியில் இடம் பிடித்துத் தனது திறமையை நிரூபித்துள்ளார். இதுதான் ஒரு முறையான கிரிக்கெட் அமைப்பின் அடையாளம்” என்று குறிப்பிட்டார்.
இந்த உலகக் கோப்பை தொடரில், பாகிஸ்தான் அணி ‘சூப்பர் 8’ சுற்றிலேயே நிகர ரன் ரேட் அடிப்படையில் வெளியேறியது. தொடக்கம் முதலே பாகிஸ்தான் அணி கோப்பையை வெல்லும் தகுதியுடன் இல்லை என்பதே நிதர்சனம். மேலும் உலகக் கோப்பை முடிவடைந்திருக்கும் சூழலில், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இனிவரும் காலங்களில் தனது நிர்வாகக் கட்டமைப்பில் என்னென்ன மாற்றங்களைக் கொண்டு வரப்போகிறது என்பதுதான் தற்போதைய எதிர்பார்ப்பாக உள்ளது.
