சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில், புதைக்கப்பட்ட புதையலைக் கண்டெடுக்கும் மூடநம்பிக்கையின் தூண்டுதலால் 21 பேரைக் கூட்டுப் படுகொலை செய்யக் கொடூரமான சதித்திட்டம் தீட்டப்பட்டதாகக் கிராம மக்கள் முன்வைத்துள்ள அதிர்ச்சிகரமான குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மகாநதி ஆற்றங்கரையில் அமைந்துள்ள, வெறும் 800 மக்கள் மட்டுமே வசிக்கும் இந்த அமைதியான கிராமத்தில், கடந்த நான்கு மாதங்களில் மட்டும் எட்டு பேர் சந்தேகத்திற்கிடமான சூழ்நிலையில் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளனர்.

இந்த மர்ம மரணங்கள் குறித்துக் கிராம மக்கள் கூறுகையில், கிராமத்தில் மளிகைக் கடை வைத்திருக்கும் ராம்சாய் ஜெயஸ்வால் என்பவர் மீது தங்களுக்குப் பலத்த சந்தேகம் இருப்பதாகவும், அவர் விற்கும் மதுவில் ‘போராக்ஸ்’ எனப்படும் வேதிப்பொருளைக் கலந்து மக்களுக்குக் கொடுத்துக் கொன்றதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர்.

இச்சம்பவத்தில் மர்ம நபர்களின் சதியில் இருந்து தப்பிய கிராமவாசியான கூறுகையில், கடந்த மே 14 ஆம் தேதி கடை உரிமையாளர் தன்னிடம் பாதி காலியான மதுப்பாட்டில் ஒன்றைக் கொடுத்ததாகவும், அதைக் குடித்த அடுத்த கணமே தான் மயங்கி விழுந்து 8 மணி நேரம் கழித்து மருத்துவமனையில் தான் நினைவு திரும்பியதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், உயிரிழந்த அனைவரும் நல்ல உடல் நலத்துடன் இருந்தவர்கள் என்றும், அவர்கள் இந்த மளிகைக் கடையில் மது அருந்திய பிறகே உயிரிழந்ததாகவும் கிராம மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். மற்றொரு கிராமவாசி, இறந்தவர்களில் ஒருவரின் உடலைப் புல்டோசர் மூலம் அப்புறப்படுத்தக் குற்றம் சாட்டப்பட்ட கடைக்காரர் முயன்றதாகப் பகீர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

இந்த வழக்கின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, மாவட்ட காவல்துறையினர் மற்றும் நிர்வாகத்தினர் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டு, இதுவரை புதைக்கப்பட்ட ஏழு உடல்களைத் தோண்டி எடுத்துத் தடயவியல் மற்றும் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர்.

இதுகுறித்து காவல் கண்காணிப்பாளர் கூறுகையில், காவல்துறையினர் இந்த மர்ம மரண வழக்கை அனைத்து கோணங்களிலும் முழுமையாக விசாரித்து வருவதாகவும், கிராமவாசிகளிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டு வரும் நிலையில், தடயவியல் மற்றும் பிரேதப் பரிசோதனை அறிக்கைகள் கிடைத்த பின்னரே இந்த மாபெரும் மர்ம வழக்கு முழுமையாகத் தீர்க்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.