இராஜஸ்தான் மாநிலம் சவாய் மாதோபூர் மாவட்டத்தில் உள்ள ரந்தம்பூர் வனப்பகுதியை ஒட்டிய தோத்ரா கிராமத்தில், சிறுத்தையின் பிடியிலிருந்து தனது தம்பியை ஒரு அக்கா போராடி மீட்ட நெகிழ்ச்சியான சம்பவம் நடந்துள்ளது.
மேலும் கடுமையான வெயில் மற்றும் மின்வெட்டு காரணமாக பத்ரிலால் குர்ஜர் என்பவரது குடும்பத்தினர் வீட்டின் மொட்டை மாடியில் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது, நள்ளிரவு ஒரு மணி அளவில் அங்கு வந்த ஒரு சிறுத்தை, மாடியில் தூங்கிக் கொண்டிருந்த 15 வயது சிறுவனான ராஜ் குர்ஜரின் தலையைக் கவ்வி, மாடியின் மற்றொரு பக்கத்திற்கு இழுத்துச் சென்றது.
இதனால் தம்பியின் அலறல் சத்தம் கேட்டு விழித்த அவனது 20 வயது அக்கா ராதா குர்ஜர், சிறிதும் பயப்படாமல் சிறுத்தையுடன் தைரியமாகப் போராடினார். சிறுத்தை தம்பியை இழுத்துச் செல்ல முயன்றபோது, ராதா அவனது கால்களை இறுக்கமாகப் பிடித்துக்கொண்டு முழு பலத்துடன் தன் பக்கமாக இழுத்தார்.
மேலும் சிறுத்தைக்கும் அந்தப் பெண்ணுக்கும் இடையே ஒரு கடுமையான இழுபறிப் போராட்டம் நீடித்தது. இவர்களின் சத்தத்தைக் கேட்டு குடும்பத்தினரும் அக்கம் பக்கத்தினரும் ஓடி வந்து கூச்சலிட்டதால், சிறுத்தை சிறுவனை விட்டுவிட்டு காட்டுக்குள் ஓடியது.
இந்தத் தாக்குதலில் சிறுவனின் தலையிலும் உடலிலும் பலத்த காயங்கள் ஏற்பட்டு தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறான். தனது உயிரையும் பொருட்படுத்தாமல் சிறுத்தையின் தாடைகளிலிருந்து தம்பியை மீட்ட அக்காவின் இந்த வீரமிக்க செயல் அந்தப் பகுதி மக்களிடையே பெரும் பாராட்டைப் பெற்று வருகிறது.
