மகாராஷ்டிராவில் மருத்துவர்களின் அலட்சியத்தால் நிகழ்ந்த ஒரு அதிர்ச்சியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இங்குள்ள ஒரு மருத்துவமனையில், விளையாடும்போது வலது கையில் பலத்த காயமடைந்து எலும்பு முறிவு ஏற்பட்ட ஒரு சிறுமியை அவளது பெற்றோர் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

மேலும் சிறுமியைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவளுக்கு மாவுக்கட்டு போட வேண்டும் என்று பரிந்துரைத்தனர். ஆனால், அறுவை சிகிச்சை அறையில் இருந்த மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களின் அசாத்தியமான அலட்சியத்தின் காரணமாக, காயம் ஏற்பட்ட வலது கையை விடுத்து, நன்றாக இருந்த இடது கையில் மாவுக்கட்டு போட்டுள்ளனர்.

இந்நிலையில் அவரை சிகிச்சை முடிந்து சிறுமி வெளியே வந்தபோது, அவளது இடது கையில் கட்டு போட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், உடனடியாக மருத்துவர்களிடம் முறையிட்டு தங்களின் கண்டனத்தைத் தெரிவித்தனர்.

இந்த அஜாக்கிரதையான செயலால் மருத்துவமனையில் பெரும் பரபரப்பும், பெற்றோரிடையே கடும் கொந்தளிப்பும் ஏற்பட்டது. மருத்துவர்களின் இந்த ‘அலட்சியத்தின் உச்சம்’ குறித்த செய்தி சமூக வலைத்தளங்களில் பரவி, பொதுமக்களிடையே கடும் விவாதத்தையும், மருத்துவத்துறையின் மீதான அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.