முன்னணி அரியான்வி பாடகரும் யூடியூபருமான அங்கீத் பால்யான், உத்தரப் பிரதேச மாநிலம் சாம்லி பகுதியில் உள்ள உடற்பயிற்சி கூடத்திற்குச் சென்றுவிட்டு வெளியேறியபோது, மர்ம நபர்களால் மிகக் கொடூரமாகச் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

மாலை நேரத்தில் உடற்பயிற்சிக் கூடத்திலிருந்து வெளியேறித் தனது காரை நோக்கிச் சென்றவரை, இரண்டு இருசக்கர வாகனங்களில் வந்த நான்கு பேர் கொண்ட கும்பல் மிக அருகில் இருந்து கண்மூடித்தனமாகத் தாக்கியுள்ளது. இந்த ஒட்டுமொத்தப் படுகொலைச் சம்பவமும் அங்குப் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி, தற்போது இணையத்தில் வெளியாகிப் பார்ப்போரை உரைய வைத்துள்ளது.

வெறும் 30 வினாடிகளுக்குள் சுமார் 18 ரவுண்டுகள் வரை சுடப்பட்ட இந்தத் தாக்குதலில், அங்கீத் பால்யான் நிலைதடுமாறி சம்பவ இடத்திலேயே இரத்த வெள்ளத்தில் சரிந்தார். அவரை உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோதிலும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் உறுதி செய்தனர்.

பாடகர் மீது நடத்தப்பட்ட இந்த கொடூரத் தாக்குதலுக்கான பின்னணி குறித்துக் காவலாளர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் இது கும்பல் மோதல் அல்லது தனிப்பட்ட முன்விரோதம் காரணமாக நடந்திருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.

சம்பவ இடத்தைக் கைப்பற்றிய காவல்துறையினர், கொலையாளிகளைப் பிடிக்கத் தனிப்படைகளை அமைத்து தீவிரமாகத் தேடி வருகின்றனர். இணையத்தில் வைரலாகி வரும் அந்த சிசிடிவி காட்சிகளை ஆதாரமாகக் கொண்டு குற்றவாளிகளின் அடையாளங்களைக் கண்டறியும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

வளரும் இளம் கலைஞர் ஒருவர், பொதுவெளியில் இப்படித் துப்பாக்கியால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டிருப்பது அப்பகுதியில் பெரும் சட்ட ஒழுங்குப் பிரச்சினையையும், பொதுமக்கள் மத்தியிலும் அவருடைய ஆதரவாளர்கள் மத்தியிலும் மாபெரும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

“>