பீகார் மாநிலத்தில் ஒரே நேரத்தில் அடுத்தடுத்து நிகழ்ந்துள்ள இரு வேறு பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் இந்தியாவையே உலுக்கியுள்ளன. மனிதாபிமானமற்ற இந்தச் செயல்களால் அந்த மாநிலமே கொந்தளிப்பில் ஆழ்ந்துள்ளது.
பீகாரின் புர்னியா மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றில், கடந்த மார்ச் 25-ஆம் தேதி இந்த கொடூரம் அரங்கேறியுள்ளது. கிராமத்தில் நடைபெற்ற ‘சத்சங்கம்’ வழிபாட்டு நிகழ்ச்சியில் ஒரு சிறுமியின் குடும்பத்தினர் பங்கேற்றிருந்தனர். மாலை நேரத்தில் இயற்கை உபாதை கழிக்க வெளியே சென்ற சிறுமியை, 4 பேர் கொண்ட கும்பல் வாயை மூடி கடத்திச் சென்று மக்காச்சோளத் தோட்டத்திற்குள் வைத்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
இந்த கொடூரத்தை வீடியோ எடுத்த அந்த கும்பல், வெளியே சொன்னால் வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவதாகச் சிறுமியை மிரட்டியுள்ளது. இதனால் அச்சமடைந்த சிறுமி பல நாட்களாக மௌனம் காத்துள்ளார். பின்னர் தாயிடம் விவரத்தைக் கூறவே, அதிர்ச்சியடைந்த அவர் காவல் நிலையம் சென்றார். ஆனால், அதற்குள் கிராம பஞ்சாயத்து மூலம் இந்த விவகாரத்தை அமுக்க முயன்றதால் புகார் அளிக்க தாமதமானதாகத் தெரிகிறது. தற்போது 4 பேர் மீது போக்சோ (POCSO) சட்டத்தின் கீழ் வழக்கு பதியப்பட்டு, தலைமறைவான குற்றவாளிகளைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று பாட்னா அருகே பர்சா பஜார் பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு மனிதாபிமானமற்ற மற்றொரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. இரவு 11:30 மணியளவில் வீட்டில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த 3 வயதுக் குழந்தையை, அவரது சொந்தச் சித்தப்பாவே தனது இரு நண்பர்களுடன் சேர்ந்து கடத்திச் சென்றுள்ளார்.
மது போதையில் இருந்த அந்த நபர், குழந்தையை 500 மீட்டர் தொலைவில் இருந்த வெறிச்சோடிய வயல்வெளிக்குத் தூக்கிச் சென்று தனது நண்பர்களுடன் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு, மீன் பண்ணை காவலாளி ஓடி வரவே, கிராமத்தினர் திரண்டனர். ஆட்களைக் கண்டதும் குற்றவாளிகள் குழந்தையைக் கைவிட்டுத் தப்பினர்.
தற்போது அந்தக் குழந்தை பாட்னா எய்ம்ஸ் (AIIMS) மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்தச் சம்பவம் தொடர்பாகச் சித்தப்பா மற்றும் அவரது ஒரு நண்பரை போலீஸார் கைது செய்துள்ளனர். தப்பியோடிய மற்றொரு நபரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
மேலும் ஒரே மாநிலத்தில் அரங்கேறியுள்ள இந்த இரு கோர சம்பவங்களும், பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்த சட்ட அமலாக்கத்தின் மீது பெரும் கேள்விக் குறிகளை எழுப்பியுள்ளன. குற்றவாளிகளுக்குத் தூக்குத் தண்டனை வழங்க வேண்டும் என மாநிலம் முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ளன
