வடோதராவைச் சேர்ந்த 17 வயது மாணவன் ஒருவன், 11-ஆம் வகுப்புத் தேர்வு அழுத்தத்தைத் தாங்க முடியாமல் தனது வீட்டில் இருந்த 3 லட்ச ரூபாயைத் திருடிக்கொண்டு கோவாவிற்குத் தப்பிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நள்ளிரவில் வீட்டை விட்டு வெளியேறிய அந்த மாணவன், தனது அக்காவின் UPSC தேர்வு கட்டணத்திற்காக வைக்கப்பட்டிருந்த பணத்தையும் எடுத்துச் சென்றுள்ளான்.
மறுநாள் காலை மாணவனைக் காணாததால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்தனர். சிசிடிவி காட்சிகள் மற்றும் செல்போன் சிக்னல் உதவியுடன் தேடுதல் வேட்டையைத் தீவிரப்படுத்திய போலீசார், இரண்டு நாட்களுக்குப் பிறகு கோவா கடற்கரை விடுதி ஒன்றில் நண்பனுடன் உல்லாசமாக இருந்த மாணவனைக் கண்டுபிடித்தனர்.
விசாரணையில், படிப்புச் சுமை தன்னை மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாக்கியதால், அதிலிருந்து தப்பிக்கவே இப்படிச் செய்ததாக அந்த மாணவன் அழுதுகொண்டே தெரிவித்துள்ளான்.
தப்பிச் சென்ற இரண்டு நாட்களிலேயே அந்த மாணவன் சுமார் 50 ஆயிரம் ரூபாயைச் செலவு செய்திருந்தது தெரியவந்தது. அந்தச் சிறுவன் மைனர் என்பதால் அவர் மீது வழக்குப் பதிவு செய்யாத போலீசார், உரிய ஆலோசனை (Counselling) வழங்கி பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.
மேலும், படிப்பு அழுத்தம் காரணமாக இது போன்ற விபரீத முடிவுகளை எடுக்கும் மாணவர்களைக் கவனமாகக் கையாளுமாறு பெற்றோருக்குப் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
