பீகார் மாநிலம் ஜமுய் மாவட்டத்தில், முதுமையின் தனிமையாலும் கிராம மக்களின் ஏளனப் பேச்சுகளாலும் சலிப்படைந்த 65 வயது முதியவரும், 62 வயது மூதாட்டியும் கோவிலில் முறைப்படி திருமணம் செய்துகொண்ட சம்பவம் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
கைரா வட்டாரத்தைச் சேர்ந்த சபாத் மஞ்சி என்ற முதியவரின் முதல் மூன்று மனைவிகளும் அடுத்தடுத்து இறந்துவிட்ட நிலையில், கடந்த 15 ஆண்டுகளாக அவர் தனியாகவே வாழ்ந்து வந்தார். அவரது மகனும் மருமகளும் வெளியூரில் வேலை செய்வதால், முதுமையில் சாப்பாட்டிற்கும் உடல்நலக் குறைவின் போதும் அவர் கடும் அவதிப்பட்டார்.
அதே கிராமத்தில் வசிக்கும் 62 வயதான ஆஷா தேவி என்பவரின் கணவரும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்ட நிலையில், அவரது மகளும் அவரைக் கைவிட்டுள்ளார். எதிரெதிர் வீட்டில் வசித்து வந்த இந்த இருவரும் முதுமையில் ஒருவருக்கொருவர் துணையாக இருந்ததோடு, கடந்த ஓராண்டாக ஒரே வீட்டில் கணவன் மனைவியாக வாழத் தொடங்கினர்.
அண்டை வீட்டார் ஒன்றாக வாழ்வது கிராம மக்களிடையே, குறிப்பாகப் பெண்களிடையே பெரும் ஏளனப் பேச்சுகளையும் வதந்திகளையும் கிளப்பியது. தினசரி சமூகத்தின் குத்தல் பேச்சுகளால் சோர்வடைந்த இந்த முதிய தம்பதி, தங்களின் உறவுக்குச் சட்டப்பூர்வ மற்றும் சமூக அங்கீகாரம் தேடி, மகாதேவ் சிமரியா கோவிலில் தைரியமாகத் திருமணம் செய்துகொண்டனர்.
சபாத் மஞ்சியின் மகனும் மருமகளும் இந்த வயதில் நடந்த திருமணத்தை ஏற்க மறுத்து, குடும்பத்தை விட்டு ஒதுக்கி வைப்பதாகக் கூறி கோபமடைந்துள்ளனர். இருப்பினும், முதுமையில் அனைவருக்கும் ஒரு ஆதரவு தேவை என்ற நோக்கில் கிராம மக்கள் பலரும் இந்தத் தம்பதிக்கு ஆதரவாக முன்வந்துள்ளனர். சமூக வலைதளங்களில் இந்த முதிய ஜோடியின் திருமண வீடியோ தற்போது பயங்கரமாக வைரலாகி வருகிறது.
