உத்தரப்பிரதேச மாநிலம் புலந்த்சாகர் பகுதியில் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட சாதாரணத் தகராறு, மூன்று பேரின் உயிரைப் பறித்த கொடூர சம்பவமாக மாறியுள்ளது. கடந்த ஏப்ரல் 25-ம் தேதி இரவு, ஜீத்து சைனி என்பவரின் பிறந்தநாள் விழாவில் அவரது நண்பர்கள் சிலர் அவர் முகத்தில் கேக் பூசியுள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த ஜீத்து சைனிக்கும் நண்பர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒருகட்டத்தில் இது முற்றிய நிலையில், துப்பாக்கியால் சுடப்பட்டதில் மூன்று இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கியக் குற்றவாளியான ஜீத்து சைனியைப் பிடிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டதோடு, அவர் குறித்து தகவல் கொடுப்போருக்கு ரூ. 50,000 வெகுமதியும் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், புலந்த்சாகர் அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, ஸ்கூட்டரில் தப்பிச்செல்ல முயன்ற ஜீத்து சைனி போலீசாரை நோக்கித் துப்பாக்கியால் சுட்டுள்ளார்.

இதற்குப் பதிலடியாக போலீசார் நடத்திய என்கவுன்டரில் அவர் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் ஏற்கனவே 6 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பறிமுதல் செய்யப்பட்ட துப்பாக்கி மற்றும் வாகனத்தைக் கொண்டு போலீசார் மேலதிக விசாரணை நடத்தி வருகின்றனர்.