பீகார் மாநிலத்தில் காவலராகப் பணியாற்றும் நபர் ஒருவர், தனது இரண்டாம் மனைவி மற்றும் குழந்தையுடன் முதல் மனைவியின் வீட்டிற்குச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து முதல் மனைவி அளித்த புகாரின் பேரில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதாவது பீகார் மாநிலம் தானாபூர் போலீஸ் காலனியில் வசித்து வரும் நிஷு சிங் என்பவருக்கும், காவலர் ரவி ரஞ்சன் சிங் என்பவருக்கும் கடந்த 2007-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 14 மற்றும் 16 வயதில் இரண்டு பிள்ளைகள் உள்ளனர். ரவி ரஞ்சன் சிங் தற்போது போலீசாக  பணியாற்றி வருகிறார்.

சனிக்கிழமை மாலை ரவி ரஞ்சன் சிங் திடீரென தனது வீட்டிற்கு ஒரு பெண்ணுடனும், கையில் ஒரு பச்சிளம் குழந்தையுடனும் வந்துள்ளார். அந்தப் பெண் யார் என்று நிஷு சிங் கேட்டபோது, “நான் இவருடைய இரண்டாவது மனைவி என்று கணவர் கூற, இந்தக் குழந்தை இவருடையதுதான்” என்று அந்தப் பெண் குண்டைத் தூக்கிப் போட்டார். இதைக் கேட்டு நிஷு சிங் மற்றும் அவரது  பிள்ளைகள் பேரதிர்ச்சியில் உறைந்தனர்.

வீட்டில் தொடங்கிய இந்த மோதல் தகராறாக மாறி, இறுதியில் காவல் நிலையத்தை எட்டியது. அங்கு நடந்த விசாரணையில் பல அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகின. அதாவது ரவி ரஞ்சன் சிங்குடன் வந்த பெண்ணின் பெயர் உமா. அவர் 2018-ஆம் ஆண்டு பேட்ச் காவலர் ஆவார். தற்போது கயா மாவட்டத்தில் ‘டயல் 112’ பிரிவில் பணியாற்றி வருகிறார். கணவரின் இந்த இரட்டை வாழ்க்கையையும், குழந்தையையும் நேரில் கண்ட முதல் மனைவி நிஷு சிங், காவல் நிலைய வளாகத்திலேயே கதறி அழுதது காண்போரை  கலங்க செய்தது.

தனது கணவர் தன்னை மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் துன்புறுத்துவதாக நிஷு சிங் புகார் அளித்துள்ளார். இது குறித்து காவல் ஆய்வாளர் பிரசாந்த் பரத்வாஜ் கூறுகையில், “பாதிக்கப்பட்ட பெண்ணின் புகாரைப் பெற்றுள்ளோம். இது ஒரு குடும்பப் பிரச்சினை என்பதால் அனைத்து கோணங்களிலும் விசாரணை நடத்தி வருகிறோம்” என்றார். மேலும் காவல்துறையில் பணியாற்றும் இருவரே இத்தகைய ஒழுக்கக் கேடான செயலில் ஈடுபட்டு குடும்பத்தைச் சிதைத்த சம்பவம் பீகாரில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.