மனைவி தனது கள்ளக்காதலர்களுடன் இருக்கும் புகைப்படங்களை வாட்ஸ்-அப் ஸ்டேட்டஸில் வைத்து டார்ச்சர் செய்ததால், மனமுடைந்த கணவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கர்நாடக மாநிலம் உத்தரகன்னடா மாவட்டத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது ராகவேந்திர வடகர் (37) என்பவர், கடந்த 3 ஆண்டுகளாக மலேசியாவில் வேலை பார்த்து விட்டு, ஒரு வாரத்திற்கு முன்புதான் சொந்த ஊர் திரும்பினார். ஆனால், அவருடன் வாழப் பிடிக்காத அவரது மனைவி, இரண்டு குழந்தைகளுடன் தனது பெற்றோர் வீட்டுக்குச் சென்றுவிட்டார். ராகவேந்திரா சமாதானம் செய்ய முயன்றும் அவர் வர மறுத்துள்ளார்.
ராகவேந்திராவை மனரீதியாகத் துன்புறுத்த நினைத்த அவரது மனைவி, தான் வேறு ஆண்களுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை வாட்ஸ்-அப் ஸ்டேட்டஸில் பதிவிட்டு வந்துள்ளார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த ராகவேந்திரா கேட்டபோது, “உன்னுடன் வாழ முடியாது, நீ செத்துப் போ” என முகத்தில் அடித்தாற்போலக் கூறியுள்ளார். மேலும், தனக்குப் பல ஆண்களுடன் தொடர்பு இருப்பதாகவும் கூறி ராகவேந்திராவை கொடுமைப்படுத்தியுள்ளார்.
வாழ்க்கையில் விரக்தியடைந்த ராகவேந்திரா, நேற்று முன்தினம் தனது கை நரம்பை அறுத்துக் கொண்டு, அந்தப் ரத்த வெள்ள புகைப்படத்தை தனது மனைவிக்கு வாட்ஸ்-அப்பில் அனுப்பியுள்ளார். அதைப் பார்த்தும் இரக்கம் காட்டாத அந்தப் பெண், “நீ செத்தாலும் எனக்குக் கவலையில்லை” எனப் பதிலளித்துள்ளார். இதனால் மனம் உடைந்த ராகவேந்திரா, தனது இல்லத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
தகவலறிந்து வந்த போலீசார், ராகவேந்திராவின் உடலை மீட்டு அவர் எழுதி வைத்திருந்த கடிதத்தைக் கைப்பற்றினர். அதில், “தன் மனைவி மற்ற ஆண்களுடன் இருக்கும் புகைப்படங்களை அனுப்பித் தன்னைத் துன்புறுத்தியதாகவும், அவருடன் சேர்ந்து வாழ முடியாத விரக்தியிலும் தற்கொலை செய்துகொள்வதாக” உருக்கமாகக் குறிப்பிட்டிருந்தார். இது குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
