கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டத்தில், மனைவி கள்ளக்காதலனுடன் ஓடியதால் மனமுடைந்த அர்ச்சகர் ஒருவர், தனது இரண்டு மகன்களையும் கழுத்தை நெரித்துக் கொன்றுவிட்டுத் தானும் தற்கொலை செய்து கொண்டார். அதாவது  சிவண்ணா (40) என்பவர் அப்பகுதியில் உள்ள மல்லேசுவரா சாமி கோவிலில் அர்ச்சகராகப் பணியாற்றி வந்தார். இவருக்குக் காவ்யா (30) என்ற மனைவியும், ஜீவன் (10), பிரானேஷ் (6) என்ற இரண்டு மகன்களும் இருந்தனர்.

காவ்யாவுக்கும், சிவண்ணாவின் அக்காள் மகன் ஹேமந்த் என்பவருக்கும் இடையே கள்ளத் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து குடும்பத்தினர் கண்டித்தும் காவ்யா தனது போக்கை மாற்றிக்கொள்ளவில்லை. கடந்த வாரம் தனது கள்ளக்காதலனுடன் வீட்டை விட்டு ஓடிய காவ்யா, போலீஸ் புகாருக்குப் பின் இரண்டு நாட்களுக்கு முன்பு வீடு திரும்பினார். ஆனால், மீண்டும் வீட்டில் இருந்த பணம் மற்றும் நகைகளை எடுத்துக்கொண்டு ஹேமந்துடன் ஓடிவிட்டார்.

தொடர்ச்சியான அவமானத்தாலும், மனைவியின் நடத்தையாலும் மனமுடைந்த சிவண்ணா, நேற்று காலை தனது இரண்டு மகன்களையும் கழுத்தை நெரித்துக் கொன்றுவிட்டு, தானும் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். அக்கம் பக்கத்தினர் பார்த்தபோது மகன்கள் சோபாவிலும், சிவண்ணா தூக்கிலும் பிணமாகக் கிடந்தனர்.

போலீஸ் விசாரணையில், காவ்யாவின் டார்ச்சரால் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பே சிவண்ணாவின் தாய் ஹொன்னம்மா கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. தற்போது ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் போலீஸார் வழக்குப் பதிவு செய்து தலைமறைவான காவ்யா மற்றும் ஹேமந்தை தேடி வருகின்றனர்.