மத்திய கிழக்கில் அமெரிக்கா – இஸ்ரேல் கூட்டணிக்கும் ஈரானுக்கும் இடையே போர் அனல் பறந்து வரும் வேளையில், ஈரானின் ஒரு விசித்திரமான ‘டமி வார்ட்பேர்’ (Dummy Warfare) தந்திரம் உலக நாடுகளை வாயடைக்க வைத்துள்ளது. ஈரான் தனது விமானப்படைத் தளங்களில் உண்மையான போர் விமானங்களுக்குப் பதிலாக, தரையில் தத்ரூபமாக வரையப்பட்ட போர் விமானங்களின் படங்கள் (Decoys) மற்றும் காற்றடைக்கப்பட்ட பலூன் டேங்கர்களை நிறுத்தி வைத்து இஸ்ரேலை ஏமாற்றியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இஸ்ரேல் மற்றும் அமெரிக்கப் படைகள் ஈரானின் உண்மையான இலக்குகளைத் தாக்குகிறோம் என்று நினைத்து, பல கோடி ரூபாய் மதிப்புள்ள அதிநவீன மிசைல்களை இந்த ‘டம்மி’ இலக்குகளின் மீது வீசி வீணடித்துள்ளதாகச் சொல்லப்படுகிறது.
சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோக்களில், தாக்குதலுக்குப் பின் போர் விமானங்களின் சிதறிய பாகங்கள் ஏதும் இல்லாமல், தரை மட்டும் கருகிக் காணப்படுவதைச் சுட்டிக்காட்டி இந்தத் தகவல் பரவி வருகிறது.
குறிப்பாக, 25 கோடி ரூபாய் மதிப்புள்ள மிசைல்கள் வெறும் பெயிண்டிங் மற்றும் பலூன்கள் மீது விழுந்து ‘கச்சரா’ ஆகியுள்ளதாக நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.
ஆனால், இந்த வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் ஏஐ (AI) தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டிருக்கலாம் என்றும் ஒரு தரப்பு சந்தேகம் கிளப்புகிறது.
ரஷ்யா – உக்ரைன் போரிலும் இதுபோன்ற ‘டமி’ தந்திரங்கள் பயன்படுத்தப்பட்ட நிலையில், தற்போது ஈரான் – இஸ்ரேல் போரிலும் இந்த ‘மாயாஜால’ வித்தை அரங்கேறியிருப்பது சர்வதேச அளவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
