சீனாவில் சுமார் 2,400 கிலோமீட்டர் தூரம் கரடுமுரடான பாதையில் நடைபயணம் மேற்கொண்ட பெண் ஒருவருக்கு, தான் ஒன்பது மாத கர்ப்பிணி என்பதே தெரியாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே குழந்தை பிறந்துள்ள சம்பவம் உலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

வடக்கு சீனாவின் ஹாமி பகுதியிலிருந்து ஹெனான் மாகாணத்தில் உள்ள லுயோயாங் வரை சுமார் 1,500 மைல்கள் (2,400 கி.மீ) தூரத்தை கடந்த 139 நாட்களாக ‘டாங்’ என்ற பெண் தனது கணவருடன் நடந்து கடந்துள்ளார். உயரமான மலைகள், சுட்டெரிக்கும் பாலைவனங்கள் மற்றும் கடும் குளிரைத் தாண்டி கடந்த வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 13) தனது இலக்கை அடைந்தார்.

பயணத்தின் முடிவில் கடுமையான சளி மற்றும் உடல் சோர்வு ஏற்பட்டதால், மருந்து வாங்குவதற்காக டாங் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக கார் விபத்துக்குள்ளானது. காரின் ஏர்பேக் சரியான நேரத்தில் விரிந்ததால் அவர் உயிர் தப்பினார். விபத்து காரணமாக உடல்நிலை குறித்து பரிசோதிக்க மருத்துவமனைக்குச் சென்ற அவருக்கு, மருத்துவர்கள் கூறிய தகவல் இடியாக இறங்கியது.

அவர் சாதாரண சளியால் பாதிக்கப்படவில்லை என்றும், அவர் ஒன்பது மாத கர்ப்பிணியாக இருப்பதாகவும், எந்த நேரத்திலும் பிரசவம் நடக்கலாம் என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

டாங்கிற்கு ‘பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம்’ (PCOS) என்ற ஹார்மோன் குறைபாடு இருந்ததால், அவருக்கு மாதவிடாய் சுழற்சி சீராக இருந்ததில்லை. 2,400 கி.மீ நடந்த போதும் அவருக்குக் கர்ப்பத்திற்கான எந்த அறிகுறிகளும் தென்படவில்லை. உடல் எடை அதிகரித்ததை நடைபயணத்தின் போது ஏற்பட்ட உணவு மாற்றமாகக் கருதியுள்ளார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே அவருக்கு 2.5 கிலோ எடையில் ஆரோக்கியமான ஆண் குழந்தை பிறந்தது.

கடும் நடைபயணம், கார் விபத்து என அனைத்தையும் தாண்டித் தாயும் சேயும் நலமாக இருப்பதால், தனது மகனுக்கு “லக்கி பேபி” (அதிர்ஷ்டக் குழந்தை) எனப் பெயரிட்டுள்ளார் டாங். ஒரு மாதம் முன்கூட்டியே குழந்தை பிறந்திருந்தாலும், தற்போது இருவரும் சீரான உடல் நலத்துடன் இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.