பாகிஸ்தானுடனான சிந்து நதி நீர் ஒப்பந்தத்தின்படி இந்தியாவுக்குச் சேர வேண்டிய தண்ணீரை முழுமையாகப் பயன்படுத்தும் வகையில், ரவி நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள ஷாபூர் கண்டி (Shahpur Kandi) அணைத் திட்டம் தற்போது வெற்றிகரமாகச் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.

இதன் மூலம் கடந்த பல தசாப்தங்களாக பாகிஸ்தானுக்கு வீணாகச் சென்று கொண்டிருந்த ரவி நதி நீர் இனி முற்றிலுமாக நிறுத்தப்பட உள்ளது. 1960-ஆம் ஆண்டு ஒப்பந்தப்படி ரவி, பியாஸ் மற்றும் சட்லெஜ் ஆகிய மூன்று கிழக்கு நதிகளின் முழு உரிமையும் இந்தியாவுக்கே வழங்கப்பட்டிருந்தது.

இருப்பினும், முறையான அணைக்கட்டுகள் இல்லாததால் உபரி நீர் பாகிஸ்தானுக்குச் சென்று கொண்டிருந்தது. தற்போது இந்த அணை கட்டி முடிக்கப்பட்டதன் மூலம், அந்தத் தண்ணீர் தடுக்கப்பட்டு ஜம்மு காஷ்மீர் மற்றும் பஞ்சாப் மாநிலங்களின் விவசாயப் பணிகளுக்காகத் திருப்பி விடப்பட உள்ளது.

ஏற்கனவே பொருளாதாரச் சிக்கலில் தவித்து வரும் பாகிஸ்தானுக்கு, இந்தியாவின் இந்த அதிரடி நடவடிக்கை பேரிடியாக அமைந்துள்ளது. இந்தியாவின் இந்த ‘வாட்டர் பாலிசி’ (Water Policy) பாகிஸ்தானின் விவசாயத்தை வெகுவாகப் பாதிக்கும் என்று அஞ்சப்படுவதால், அந்நாட்டு அரசு கடும் அதிர்ச்சியில் உள்ளது.