மனைவியைத் தற்கொலைக்குத் தூண்டியதாகக் தொடரப்பட்ட வழக்கில், கணவருக்கு வழங்கப்பட்ட 7 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து குஜராத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. “தகவல் தெரிவிக்காமல் சென்ற மனைவியைக் கணவர் அறைந்தது கொடுமையின் கீழ் வராது” என்றும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.

கடந்த 1996-ம் ஆண்டு குஜராத் மாநிலம் வல்சாத் மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக அந்தப் பெண்ணின் கணவர் மீது, மனைவியைக் கொடுமைப்படுத்துதல்  மற்றும் தற்கொலைக்குத் தூண்டுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த வல்சாத் மாவட்ட நீதிமன்றம், கடந்த 2003-ம் ஆண்டு மே 20-ம் தேதி தீர்ப்பளித்தது. அதில், மனைவியைக் கொடுமைப்படுத்தியதற்காக ஒரு ஆண்டும், தற்கொலைக்குத் தூண்டியதற்காக 7 ஆண்டுகளும் கணவருக்குச் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டது.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து அந்த நபர் குஜராத் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மனு நீதிபதி கீதா கோபி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பு வக்கீல் வாதிடுகையில், “கணவர் இரவு நேரங்களில் தாமதமாக வீட்டிற்கு வருவது தொடர்பாகத் தம்பதியிடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. மேலும், ஒருமுறை தனது பெற்றோர் வீட்டில் தங்கிய மனைவியைக் கணவர் அறைந்துள்ளார். இத்தகைய தொடர் மன உளைச்சலே அந்தப் பெண்ணின் தற்கொலைக்குக் காரணம்” என்று வாதிட்டார்.

வழக்கை விசாரித்த நீதிபதி கீதா கோபி தனது தீர்ப்பில் குறிப்பிட்டதாவது: பெண்ணின் தாய் தனது மகளைக் கணவர் அறைந்ததாகக் கூறிய போதிலும், தந்தை அதனை நேரில் பார்க்கவில்லை என்று ஒப்புக்கொண்டுள்ளார். மேலும், இது தொடர்பாக முறையான புகார்கள் எதுவும் முன்னதாகப் பதிவு செய்யப்படவில்லை.

தற்கொலைக்குத் தூண்டியதாக ஒருவரைத் தண்டிக்க வேண்டுமானால், அந்தத் தற்கொலையுடன் நேரடியாகத் தொடர்புடைய, தாங்க முடியாத மற்றும் தொடர்ச்சியான கொடுமைகள் இருந்ததற்கான உறுதியான ஆதாரங்கள் இருக்க வேண்டும்.  தன்னிடம் சொல்லாமல் பெற்றோர் வீட்டில் தங்கிய மனைவியைக் கணவர் அறைந்தது ஒரு தனிப்பட்ட சம்பவம். இது சட்டப்பிரிவு 498A-ன் கீழ் வரும் ‘கொடுமை’ என்ற வரையறைக்குள் வராது. சாதாரணத் திருமண முரண்பாடுகளைத் தற்கொலைக்குத் தூண்டியதாகக் கருத முடியாது.

மேலும் குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிராகப் போதிய ஆதாரங்கள் இல்லை என்றும், தற்கொலைக்கான காரணம் நிரூபிக்கப்படவில்லை என்றும் கூறிய நீதிபதி, கீழமை நீதிமன்றம் விதித்த தண்டனையை ரத்து செய்து, அந்த நபரை விடுவித்து உத்தரவிட்டார்.