உத்தரப்பிரதேச மாநிலம் ஹர்தோயில் சொத்துத் தகராறில் கொடூரமாகத் தாக்கப்பட்ட தனது தாயாரைக் காப்பாற்ற, 5 வயது சிறுமி ஒருவர் காயங்களையும் பொருட்படுத்தாமல் காவல் நிலையத்திற்கு ஓடிச் சென்று புகார் அளித்த சம்பவம் பரபரப்பாக பேசப்படுகிறது.
அதாவது பெண் ஒருவர், தனது கணவர், மாமனார் மற்றும் மாமியார் மறைவுக்குப் பிறகு, அவர்களுக்குச் சொந்தமான வீட்டில் வசித்து வருகிறார். இந்தச் சொத்தின் ஒரு பகுதி தொடர்பாக, அவரது கணவரின் தாய் மாமா வினோத் ஸ்ரீவஸ்தவாவுடன் நீண்ட நாட்களாகத் தகராறு இருந்து வந்துள்ளது. சொத்தை அபகரிக்க போலி பத்திரங்கள் தயாரிக்கப்பட்டதாகக் கூறி, கடந்த பிப்ரவரி 1-ஆம் தேதி வினோத் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது அந்தப் பெண் புகார் அளித்திருந்தார்.
இந்நிலையில், சனிக்கிழமை அன்று அந்தப் பெண் தனது 5 வயது மகளுடன் வீட்டிற்கு வந்தபோது, வினோத், அவரது மனைவி மற்றும் மகன் ஆகியோர் அவரை வழிமறித்துள்ளனர். சொத்து வழக்கை வாபஸ் பெற்றுக்கொண்டு, 6 லட்சம் ரூபாயைப் பெற்றுக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறும்படி அவர்கள் வற்புறுத்தியுள்ளனர். இதற்கு அந்தப் பெண் மறுப்புத் தெரிவித்ததால், ஆத்திரமடைந்த கும்பல் தடி, பெல்ட் மற்றும் கத்திகளால் அவரைத் தாக்கியுள்ளனர்.
தாக்குதலின் உச்சகட்டமாக, அவர்கள் தங்களது வளர்ப்பு நாயை 5 வயது சிறுமி மீது ஏவி விட்டுள்ளனர். நாய் கடித்ததில் சிறுமி பலத்த காயமடைந்து அலறினாள். வீட்டில் தனது தாய் உயிருக்கு ஆபத்தான நிலையில் தாக்கப்படுவதைக் கண்டு அச்சமடைந்தாலும், அந்தச் சிறுமி மன உறுதியைக் கைவிடவில்லை.
வலியைப் பொறுத்துக்கொண்டு, சுமார் 200 மீட்டர் தொலைவில் இருந்த காவல் நிலையத்திற்கு அந்தச் சிறுமி தனியாக ஓடினாள். அங்கே பணியில் இருந்த காவலர்களிடம், “எங்கள் வீட்டில் அம்மாவை யாரோ அடிக்கிறார்கள், என்னையும் நாய் கடித்துவிட்டது, தயவுசெய்து வந்து காப்பாற்றுங்கள்” என்று அழுதுகொண்டே கூறினாள்.
சிறுமி சொன்னதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த போலீசார், உடனடியாக அவளுடன் வீட்டிற்கு விரைந்தனர். அங்கு அப்பெண்ணைத் தாக்கி ஆக்கிரமிப்பில் ஈடுபட்டிருந்த வினோத் மற்றும் அவரது மகனை போலீசார் கையும் களவுமாகப் பிடித்தனர்.
இது குறித்து கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சுபோத் கௌதம் கூறுகையில், “5 வயது சிறுமி அளித்த தகவலின் பேரில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது. காயமடைந்த தாயும் மகளும் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். சிறுமியின் துணிச்சலான செயலால் பெரிய அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது” என்றார்.
மேலும் பாதிக்கப்பட்ட பெண் கூறும்போது, “எனது நிலத்தை அபகரிக்க அவர்கள் என்னைக் கொல்லவும் துணிந்துவிட்டனர். என் மகளின் தைரியத்தால் தான் நான் இன்று உயிர் பிழைத்தேன்” என்று கண்ணீருடன் தெரிவித்தார்.
