சமூக வலைதளங்களில் பிரபலமடைவதற்காகவும், அதிகப்படியான ‘லைக்ஸ்’ மற்றும் ‘வியூஸ்’களைப் பெறுவதற்காகவும் இன்றைய இளைஞர்கள் பல்வேறு வினோதமான மற்றும் ஆபத்தான முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், மோட்டார் சைக்கிளை வினோதமான முறையில் மாற்றியமைத்த இளைஞர்களின் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

பொதுவாக மோட்டார் சைக்கிள் என்றாலே இரண்டு சக்கரங்கள்தான் இருக்கும். ஆனால், வைரலாகி வரும் இந்த வீடியோவில், இளைஞர்கள் சிலர் தங்களது பைக்கின் முன்புறம் மற்றும் பின்புற சக்கரங்களுக்குக் கீழே தலா இரண்டு கூடுதல் சக்கரங்களைப் பொருத்தி, அதனை ஒரு ‘ஆறு சக்கர’ வாகனமாக மாற்றியுள்ளனர்.

இந்த வினோத வாகனத்தை அந்த இளைஞர்கள் சாலையில் ஓட்டிச் செல்லும் காட்சியும் வீடியோவில் இடம் பெற்றுள்ளது. பார்ப்பதற்கு வேடிக்கையாக இருந்தாலும், இத்தகைய மாற்றங்கள் வாகனத்தின் சமநிலைக்கும் பாதுகாப்புக்கும் பெரும் அச்சுறுத்தலாக அமையும் என சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

எக்ஸ் தளத்தில் @memanoj24 என்ற கணக்கில் பகிரப்பட்டுள்ள இந்த 14 விநாடி வீடியோ, குறுகிய நேரத்திலேயே ஆயிரக்கணக்கான பார்வைகளைப் பெற்றுள்ளது. அந்த வீடியோவின் தலைப்பில், “இந்த அற்புதத்தைப் படைத்தது யார்? இவர்கள்தான் நாட்டின் எதிர்காலம். இந்தத் திறமை நாட்டை விட்டு வெளியே சென்றுவிடக் கூடாது” என நகைச்சுவையாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வீடியோவைக் கண்ட இணையவாசிகள் பல்வேறு கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். ஒரு பயனர், “பைக் ஓட்டுவதை விட்டுவிட்டு, இவர் பைக்கை ஹெலிகாப்டராகவே மாற்றிவிட்டார்” என கிண்டலடித்துள்ளார்.

மற்றொருவர், “இப்படிப்பட்ட கலைஞர்களுக்கு உரிய விருது வழங்கி கௌரவிக்க வேண்டும்” எனச் சாடியுள்ளார்.

“இப்படியெல்லாம் யோசிக்க தனி மூளை வேண்டும்” எனச் சிலர் இவர்களின் விசித்திரமான  தொழில் நுட்பத்தைக் கண்டு வியந்துள்ளனர்.

மேலும் சமூக வலைதளப் புகழுக்காக மோட்டார் வாகனச் சட்டங்களுக்குப் புறம்பாக வாகனங்களை உருமாற்றம் செய்வதும், அதனைச் பொதுச் சாலைகளில் இயக்குவதும் தண்டனைக்குரிய குற்றம் என்பது குறிப்பிடத்தக்கது. இத்தகைய ஆபத்தான சோதனைகள் விபத்துகளுக்கு வழிவகுக்கும் எனப் போக்குவரத்துத் துறையினர் எச்சரிக்கின்றனர்.