பஞ்சாப் மாநிலம் லூதியானா அருகே, கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மர்ம நபர்களை, காரில் இருந்த பெண் ஒருவர் வாளை உருவி வீராவேசத்துடன் விரட்டியடித்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஆஸ்திரேலியாவில் வசித்து வரும் ஹர்ஜிந்தர் கவுர் மங்கத் என்ற பெண், கடந்த 15 நாட்களுக்கு முன்புதான் தனது சொந்த ஊரான ராஜ்கர் கிராமத்திற்கு வந்துள்ளார். வெள்ளிக்கிழமை இரவு, அவர் தனது மாமியார் மற்றும் அத்தையுடன் தேஹ்லான் பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு காரில் சென்று கொண்டிருந்தார்.
लुधियाना में NRI हरजिंदर कौर के साहस को सलाम, तलवार निकाल लुटेरों को खदेड़ा pic.twitter.com/wzsgVWV36I
— sushil kumar (@sushil1641993) February 21, 2026
கால்வாய் ஓரம் உள்ள ஆள்நடமாட்டமற்ற சாலையில் கார் சென்றுகொண்டிருந்தபோது, மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் இவர்களைத் தொடர்ந்து பின் தொடர்வதை ஹர்ஜிந்தர் கவனித்தார்.
ஆரம்பத்தில் அவர்கள் சாதாரணமாகச் செல்வதாகக் கருதி ஹர்ஜிந்தர் வழிவிட்டுள்ளார். ஆனால், அந்த மர்ம நபர்கள் காரின் முன்னும் பின்னுமாகச் சென்று அச்சுறுத்தியுள்ளனர். ஒரு கட்டத்தில் காரின் ஜன்னல் கண்ணாடி மீது அவர்கள் முட்டைகளை வீசித் தாக்கியுள்ளனர். இதனால் கார் கண்ணாடி மறைக்கப்பட்டு, நிலைதடுமாறச் செய்து கொள்ளையடிக்கும் நோக்கில் அவர்கள் இச்செயலில் ஈடுபட்டுள்ளனர்.
காரில் இருந்தவர்கள் அச்சமடைந்த நிலையில், பாதுகாப்பு கருதி ஹர்ஜிந்தரின் அத்தை இச்சம்பவத்தைத் தனது செல்போனில் வீடியோ எடுக்கத் தொடங்கினார்.
கொள்ளையர்கள் காரை வழிமறித்துத் தாக்குதலுக்குத் தயாரானபோது, ஹர்ஜிந்தர் கவுர் சற்றும் எதிர்பாராத காரியத்தைச் செய்தார். காரில் தற்காப்புக்காக வைத்திருந்த வாளை கையில் எடுத்த அவர், ஆவேசத்துடன் காரை விட்டு வெளியே இறங்கி கொள்ளையர்களை நோக்கிச் சென்றார்.
அவரது அத்தை தடுத்தும் கேட்காத ஹர்ஜிந்தர், முடிந்தால் மோதிப்பார்” என்பது போல வாளைச் சுழற்றி கொள்ளையர்களுக்குச் சவால் விடுத்தார். ஒரு பெண் கையில் வாளுடன் ஆக்ரோஷமாக வருவதைக் கண்ட கொள்ளையர்கள் நிலை குலைந்து போயினர். நொடிப்பொழுதில் அங்கிருந்து மோட்டார் சைக்கிளைத் திருப்பிக்கொண்டு தப்பியோடினர்.
இந்தச் சம்பவம் முழுவதையும் ஹர்ஜிந்தரின் அத்தை வீடியோ எடுத்திருந்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியான சில நிமிடங்களிலேயே வைரலானது. ஹர்ஜிந்தரின் துணிச்சலைப் பாராட்டி வரும் இணையவாசிகள், அவரை“பஞ்சாப் சிங்கம்“என்றும் “நிஜமான வீராங்கனை“ என்றும் கொண்டாடி வருகின்றனர்.
வைரல் வீடியோவின் அடிப்படையில் லூதியானா போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமறைவாக உள்ள கொள்ளையர்களை அடையாளம் காணும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்து ஹர்ஜிந்தர் கவுர் கூறுகையில், “தற்போதைய சூழலில் பெண்கள் தங்களது பாதுகாப்பில் எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டும். தற்காப்புக்குத் தயாராக இருப்பது அவசியம்” என்று தெரிவித்துள்ளார்.
