இந்தியாவில் எளிய மக்கள் தங்களது அன்றாடப் பணிகளை எளிதாக்கப் பயன்படுத்தும் உள்நாட்டுத் தொழில்நுட்பத்திற்குப் பஞ்சமே இல்லை. அந்த வகையில், தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோ, சிப்ஸ் மற்றும் அப்பள பொறிகளை வறுப்பதற்கு ஒரு நபர் கையாண்ட விசித்திரமான முறையை விளக்குகிறது.

பொதுவாக வீடுகளில் அப்பள பொறிகளை  எண்ணெயில் போட்டு வறுப்பார்கள். அப்போது கொதிக்கும் எண்ணெய்க்கு மிக அருகில் கைகளைக் கொண்டு செல்ல வேண்டியிருப்பதால், எண்ணெய் கையில் தெரிப்பதற்கும் கைகள் சுடுவதற்கும் வாய்ப்பு அதிகம். மேலும், வறுத்த பொருட்களை ஒவ்வொன்றாக எடுக்கும்போது சில நேரங்களில் அவை அதிகமாகக் கருகிவிடவும் வாய்ப்புள்ளது.


இதற்குத் தீர்வாக ஒரு நபர் மிக எளிமையான ஐடியாவைக் கையாண்டுள்ளார். அவர் ஒரு பெரிய எஃகு வடிகட்டியை (Strainer) எடுத்து, அதில் ஒரு நீண்ட கம்பியை இணைத்துள்ளார். முதலில் அந்த வடிகட்டிக்குள் வறுக்க வேண்டிய பொறிகளை போட்டுக்கொள்கிறார். பின்னர் நீண்ட கம்பியைப் பிடித்துக்கொண்டு, வடிகட்டியை அப்படியே கொதிக்கும் எண்ணெய்க்குள் இறக்குகிறார்.

சில நொடிகளில் அனைத்தும் பொரிந்து மேலே வந்ததும், அப்படியே வடிகட்டியை வெளியே எடுத்துவிடுகிறார். இந்த முறையில் கைகள் எண்ணெய்க்கு மிகத் தொலைவிலேயே இருப்பதால் தீக்காயம் ஏற்படும் அபாயம் இல்லை. அதுமட்டுமின்றி, பொரித்த பொருட்களை ஒவ்வொன்றாகத் தேடி எடுக்க வேண்டிய அவசியமும் இல்லை.

இந்த வீடியோ ‘எக்ஸ்’ தளத்தில் பகிரப்பட்ட சில மணி நேரங்களிலேயே பல்லாயிரக்கணக்கான பார்வைகளைப் பெற்றுள்ளது. “இதுதான் உண்மையான இந்தியத் தொழில்நுட்பம்” என இணையவாசிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் குறைந்த செலவில், பாதுகாப்பான முறையில் வீட்டு வேலைகளைச் செய்ய இத்தகைய முறைகள் எப்போதும் மக்களிடையே வரவேற்பைப் பெறுவது குறிப்பிடத்தக்கது.