கடந்த 2005-ஆம் ஆண்டு குஜராத் மாநிலம் சூரத்தின் வராச்சா பகுதியில் நபர் ஒருவரை வாளால் தாக்கிவிட்டு தப்பியோடிய இருவரை, 21 ஆண்டுகளுக்குப் பிறகு சூரத் சிறப்புப் பிரிவு போலீசார் உத்தரபிரதேசத்தில் கைது செய்துள்ளனர்.

இந்த வழக்கில் சந்தோஷ் யாதவ் மற்றும் அவரது சகோதரர் ஷியு யாதவ் ஆகியோர் தேடப்பட்டு வந்தனர். அவர்கள் வசித்த குடிசைப்பகுதி பல ஆண்டுகளுக்கு முன்பே இடிக்கப்பட்டதால், அவர்களின் அடையாளம் மற்றும் முகவரியைக் கண்டுபிடிப்பது போலீசாருக்குப் பெரும் சவாலாக இருந்தது.

இருப்பினும், விடாமல் துப்பு துலக்கிய போலீசார், அந்தப் பகுதியில் முன்பு வசித்த சுமார் 200 குடும்பங்களைத் தேடிப்பிடித்து விசாரணை நடத்தியதில், குற்றவாளிகள் உத்தரபிரதேசத்தின் பிரயாக்ராஜில் பதுங்கியிருப்பது தெரியவந்தது.

குற்றவாளிகளைப் பிடிக்க போலீசார் சினிமா பாணியில் மாறுவேடம் அணிந்து ஆபரேஷனைத் தொடங்கினர். ஒரு தலைமை காவலர் அந்தப் பகுதியில் டீ விற்பவர் போலவும், மற்ற காவலர்கள் வாடிக்கையாளர்கள் மற்றும் தள்ளுவண்டி வியாபாரிகள் போலவும் வேடமணிந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

குற்றவாளிகளின் அடையாளம் உறுதி செய்யப்பட்டவுடன், முட்டைக் கடை மற்றும் கேரேஜ் நடத்தி வந்த இருவரையும் போலீசார் சுற்றி வளைத்துப் பிடித்தனர். 20 ஆண்டுகளுக்கு மேலாகியும் போலீசார் தங்களைக் கண்டுபிடிக்க மாட்டார்கள் என்று நினைத்திருந்த அந்த இருவரையும் தற்போது சூரத் கொண்டு வந்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.