ஆப்பிள் நிறுவனம் தனது முதல் மடிக்கக்கூடிய ஐபோனை 2026 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. புளூம்பெர்க் நிறுவனத்தின் தொழில்நுட்பச் செய்தியாளர் மார்க் குர்மன் கூற்றுப்படி, இந்தத் தொடரில் ‘ஐபோன் ப்ளிப்’ என்ற புதிய மாடலையும் ஆப்பிள் பரிசீலித்து வருகிறது.

இது தற்போது சந்தையில் உள்ள சாம்சங் கேலக்ஸி ஃப்ளிப் மற்றும் மோட்டோரோலா ரேசர் போன்ற கிளாம்ஷெல் வடிவமைப்பைக் கொண்டிருக்கும் என்றும், சதுர வடிவில் மடிக்கக்கூடிய வசதியுடன் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த மடிக்கக்கூடிய ஐபோன் 2026 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் வெளியாக வாய்ப்புள்ளது. இருப்பினும், இந்தத் திட்டம் இன்னும் ஆரம்பக் கட்டத்திலேயே இருப்பதால், இதன் இறுதி வடிவம் மற்றும் வெளியீட்டுத் தேதி குறித்த அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் இன்னும் கிடைக்கவில்லை.

இந்நிலையில் முதல் மடிக்கக்கூடிய ஐபோனுக்கு வாடிக்கையாளர்களிடையே பெரும் வரவேற்பு கிடைக்கும் என ஆப்பிள் நம்புவதாகவும், இதன் மூலம் ஸ்மார்ஃபோன் சந்தையில் புதிய மாற்றங்களை ஏற்படுத்த நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகவும் இந்த செய்தி குறிப்பு தெரிவிக்கிறது.