அடோப் நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமான அடோப் பயர்ஃபிளை, தற்போது படங்கள் மட்டுமின்றி வீடியோக்களையும் உருவாக்கும் வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளது. கூகுள் மற்றும் ஓபன் ஏஐ போன்ற நிறுவனங்களுக்குப் போட்டியாக களம் இறங்கியுள்ள இந்த ஏஐ கருவி, பயனர்கள் அளிக்கும் எளிய எழுத்து வடிவக் கட்டளைகளைக் கொண்டு உயர்தர வீடியோக்களை நொடிகளில் உருவாக்கித் தருகிறது.
குறிப்பாக, வரும் மார்ச் 16, 2026 வரை படங்கள் மற்றும் வீடியோக்களை எந்தவிதக் கட்டுப்பாடும் இன்றி அன்லிமிடெட் முறையில் இலவசமாக உருவாக்கிக் கொள்ளலாம் என்ற அதிரடி அறிவிப்பை அடோப் வெளியிட்டுள்ளது. இது டிஜிட்டல் உள்ளடக்க உருவாக்குநர்கள் மற்றும் கலைஞர்களுக்குத் தங்கள் கற்பனையைத் திரையில் கொண்டு வர ஒரு சிறந்த வாய்ப்பாக அமைந்துள்ளது.
இதைப் பயன்படுத்துவது மிகவும் எளிது. பயனர்கள் அடோப் பயர்ஃபிளை இணையதளத்திற்குச் சென்று கூகுள் அல்லது ஆப்பிள் கணக்கைப் பயன்படுத்திப் பதிவு செய்து கொள்ளலாம். இதில் உள்ள டெக்ஸ்ட் டூ வீடியோ வசதியைப் பயன்படுத்தி, தங்களுக்குத் தேவையான காட்சிகளை ஆங்கிலத்தில் டைப் செய்தால் போதும், செயற்கை நுண்ணறிவு அதனை வீடியோவாக மாற்றிக் கொடுக்கும்.
மேலும், இதில் உள்ள ஜெனரேட்டிவ் ஃபில் வசதி மூலம் ஒரு படத்தில் உள்ள தேவையற்ற பொருட்களை நீக்கவோ அல்லது புதியவற்றைச் சேர்க்கவோ முடியும். காப்புரிமை சிக்கல்கள் இல்லாத தரவுகளைக் கொண்டு இது உருவாக்கப்பட்டுள்ளதால், வணிக ரீதியான பயன்பாட்டிற்கும் இது பாதுகாப்பானது என்று அந்நிறுவனம் உறுதி அளித்துள்ளது.
