மதுரை முனிச்சாலை சந்திப்பில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பங்கேற்று 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான அதிமுகவின் முக்கிய வாக்குறுதிகள் அடங்கிய துண்டுப் பிரசுரங்களை மக்களிடம் வழங்கினார்.
இதில் பெண்களுக்கு மாதந்தோறும் 2,000 ரூபாய் உதவித்தொகை, அனைவருக்கும் அம்மா இல்லம், ஆண்-பெண் இருவருக்கும் இலவசப் பேருந்து பயணம், 150 நாட்கள் வேலை வாய்ப்புத் திட்டம் மற்றும் மகளிருக்கு இருசக்கர வாகன மானியம் போன்ற கவர்ச்சிகரமான அறிவிப்புகள் இடம்பெற்றிருந்தன.
அதிமுக சொன்னதைச் செய்யும், சொல்லாததையும் செய்யும் என அவர் இதன்போது உறுதியளித்தார். தொடர்ந்து பேசிய செல்லூர் ராஜு, திமுக அரசு மக்களை வரிச்சுமையால் வாட்டி வதைப்பதாகவும், விலைவாசி உயர்வால் சாமானிய மக்கள் மின்விசிறியைப் பயன்படுத்தக்கூட அஞ்சுவதாகவும் விமர்சித்தார்.
தமிழகத்தில் தற்போது மதுபான விற்பனை மற்றும் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளதாகக் குற்றம் சாட்டிய அவர், 2021 தேர்தலின் போது மதுவிலக்கு குறித்து திமுக அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை எனச் சுட்டிக்காட்டினார்.
அதிமுக ஆட்சியின் 10 ஆண்டு சாதனைகளை விளக்கிய அவர், திமுக அரசு புதிய திட்டங்களைக் கொண்டு வருவதை விட ஊழலில்தான் கவனம் செலுத்துவதாகக் கூறினார்.
முக்கியமாக, 2026-ல் அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் தமிழகத்தில் உள்ள அனைத்து மதுபானக் கடைகளும் மூடப்படும் என்றும், இதற்கான கோப்பில் எடப்பாடி பழனிசாமி முதல் கையெழுத்திடுவார் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், அதிமுக ஆட்சியில் 17 மருத்துவக் கல்லூரிகள் கொண்டு வரப்பட்ட நிலையில், கடந்த ஐந்து ஆண்டுகால திமுக ஆட்சியில் ஒரு புதிய மருத்துவக் கல்லூரி கூட அமைக்கப்படவில்லை என அவர் சாடினார்.
