தமிழக வெற்றிக் கழகத்துடன் காங்கிரஸ் கட்சி கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவதாக வெளியாகும் தகவல்களைத் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
சென்னையில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர், காங்கிரஸ் கட்சித் தலைமையோ அல்லது மாநில நிர்வாகிகளோ தவெக-வுடன் எந்தப் பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை என்றும், இந்தியா கூட்டணி ஒரு கொள்கை ரீதியான கூட்டணி என்பதால் அதனை யாராலும் சிதைக்க முடியாது என்றும் தெரிவித்தார்.
மேலும், திமுக-வுடன்தான் தங்களது கூட்டணி தொடர்வதாகவும், உண்மைக்குப் புறம்பான தகவல்களைத் திரும்பத் திரும்பப் பரப்புவது சிலரின் உள்நோக்கம் என்றும் அவர் காட்டமாகத் தெரிவித்தார்.
2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தொகுதிப் பங்கீடு மற்றும் கூட்டணி குறித்த ஆலோசனைகள் நடந்து வரும் நிலையில், காங்கிரஸ் மேலிடம் எடுக்கும் முடிவே இறுதியானது என அவர் குறிப்பிட்டார். இதற்கிடையில், மதுரை தெற்கு தொகுதியில் காங்கிரஸ் போட்டியிட வேண்டும் எனச் சொல்லி ஒட்டப்படும் போஸ்டர்கள் அநாகரிகமானது என்றும் அவர் விமர்சித்தார்.
தமிழகத்திற்கும் காங்கிரஸ் பேரியக்கத்திற்கும் எது நல்லதோ, அந்தச் சரியான முடிவை அகில இந்திய காங்கிரஸ் தலைமை எடுக்கும் எனத் தெரிவித்த செல்வப்பெருந்தகை, திமுக-வுடனான உறவில் எந்த மாற்றமும் இல்லை என்பதைத் தெளிவுபடுத்தினார்.
