சிவகங்கை மாவட்டத்திற்கு அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சுமார் 2,560 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு நலத்திட்டங்களைத் தொடங்கி வைத்து உரையாற்றினார். அப்போது பேசிய அவர், அதிமுக ஆட்சியில் தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்ட எந்தவொரு வாக்குறுதியையும் எடப்பாடி பழனிசாமி நிறைவேற்றவில்லை என்று கடுமையாக விமர்சித்தார்.
58 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இலவச பேருந்து பயணம் உள்ளிட்ட பல திட்டங்களை அறிவித்துவிட்டு அதிமுகவினர் மக்களை ஏமாற்றிவிட்டதாகவும், சொன்னதைச் செய்யாத பழனிசாமிக்கும், சொன்னதைச் செய்யும் திமுக அரசுக்கும் உள்ள வித்தியாசத்தை மக்கள் நன்கு அறிவார்கள் என்றும் அவர் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
சிவகங்கையின் வீர வரலாற்றைப் புகழ்ந்து பேசிய முதலமைச்சர், அங்கு 2,119 கோடி ரூபாய் செலவில் குடிநீர் திட்டங்கள் மற்றும் மினி டைடல் பூங்கா உள்ளிட்ட முக்கியப் பணிகளைத் தொடங்கி வைத்தார்.
மகளிர் உரிமைத் தொகை, காலை உணவுத் திட்டம் போன்ற திராவிட மாடல் அரசின் முத்திரைத் திட்டங்கள் லட்சக்கணக்கான மக்களைச் சென்றடைந்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், இன்னும் பல கனவுத் திட்டங்களைச் செயல்படுத்த ‘திராவிட மாடல் 2.0’ ஆட்சிக்கு மக்கள் ஆதரவு தர வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் கோரிக்கைகளை ஏற்று கல்வி மற்றும் வளர்ச்சித் திட்டங்களுக்கும் அவர் அடிக்கல் நாட்டினார்.
