தமிழகத்தில் அடுத்த வருடம் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் தேர்தலில் வெற்றி பெறுவதற்கான வியூகங்களை அரசியல் கட்சிகள் வகுத்து வருகிறது. அடுத்து வரும் தேர்தலில் நான்கு முனை போட்டிகள் நிலவும் என்று கூறப்படும் நிலையில் ஆளும் கட்சியான திமுக கூட்டணி பலத்துடன் தேர்தலை சந்திக்க இருக்கிறது. அதேபோன்று எதிர்க்கட்சியான அதிமுக மற்றும் பாஜக கூட்டணி, தமிழக வெற்றிக்கழகம் மற்றும் நாம் தமிழர் கட்சி என மொத்தம் நான்கு முனை போட்டிகள் நிலவுகிறது.
ஒவ்வொரு கட்சிகளும் அரசியல் பணிகளை மேற்கொண்டு வரும் நிலையில் மக்களுக்கான வாக்குறுதிகளையும் கொடுத்து வருகின்றனர். அந்த வகையில் திமுக அரசு ஆட்சி பொறுப்பு ஏற்ற பிறகு பெண்களுக்கு மகளிர் உரிமைத்தொகை மற்றும் புதுமைப்பெண் திட்டத்தின் மூலம் கல்லூரி படிக்கும் மாணவிகளுக்கு மாதம் ரூபாய் 1000 என பல்வேறு விதமான திட்டங்களை பெண்களுக்காக செயல்படுத்தி வரும் நிலையில் இலவச பேருந்து பயண வசதியையும் கொடுக்கிறது.
இந்த நிலையில் 2026 ஆம் ஆண்டு தேர்தலை முன்னிட்டு மூன்று மெகா திட்டங்களை செயல்படுத்த திமுக திட்டமிட்டுள்ளதாக தற்போது ஒரு தகவல் வெளிவந்துள்ளது. அதன்படி மகளிர் உரிமைத்தொகை பெறாதவர்கள் தற்போது புதிதாக விண்ணப்பித்துள்ள நிலையில் அவர்களுக்கு டிசம்பர் 15ஆம் தேதி முதல் பணம் வழங்கப்பட இருக்கிறது.
அதன்பிறகு 20 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கும் திட்டம் மற்றும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரொக்கத்துடன் கூடிய பொங்கல் பரிசுத்தொகுப்பு போன்றவைகளையும் வழங்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் பொங்கல் பரிசு தொகையாக 5000 ரூபாய் அரசு கொடுக்க இருப்பதாக ஒரு தகவல் வெளிவருவது குறிப்பிடத்தக்கதாகும்.
