பீகார் மாநிலம், மோதிஹரி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் ரஞ்சித் குமார் என்பவர், தனது மனைவி குஞ்சா தேவியைக் கொலை செய்துவிட்டதாகக் கூறப்பட்ட வழக்கில், கடந்த நான்கு மாதங்களாகச் சிறையில் இருந்த நிலையில், தற்போது குஞ்சா தேவி உயிருடன் மீட்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருமணமான சில நாட்களிலிருந்தே குஞ்சா தேவி, அறியாத நபர் ஒருவருடன் தொடர்ந்து பேசியதால், கணவன் மனைவிக்குள் தகராறு நிலவியுள்ளது. கடந்த ஜூலை 3, 2025 அன்று சண்டை முற்றிய நிலையில், குஞ்சா தேவி நள்ளிரவில் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.
ரஞ்சித் முதலில் மனைவியைக் காணவில்லை என்று புகார் அளித்த நிலையில், இரண்டு நாட்களுக்குப் பிறகு குஞ்சாவின் தந்தை, வரதட்சணைக் கொடுமை மற்றும் கொலை செய்து உடலை மறைத்ததாக ரஞ்சித் மீது வழக்குப் பதிவு செய்துள்ளார்.
குஞ்சா தேவியின் தந்தை கொடுத்த புகாரால், கைதுக்கு அஞ்சிய ரஞ்சித் குமார், சம்பவம் நடந்த ஒரு வாரத்திற்குள் நீதிமன்றத்தில் தன்னுடைய குற்றத்தை ஒப்புக்கொண்டு சரணடைந்தார். அதன் காரணமாக அவர் நான்கு மாதங்களாகச் சிறையில் இருந்தார். இந்நிலையில், ரஞ்சித்தின் குடும்பத்தினர் அளித்த ஒத்துழைப்பு மற்றும் நவீன கண்காணிப்பு உதவியுடன் போலீசார் விசாரணையைத் தொடர்ந்தனர்.
விசாரணையில், குஞ்சா தேவி டெல்லியில் உயிருடன் இருக்கிறார் என்றும், அதே கிராமத்தைச் சேர்ந்த ஒரு இளைஞருடன் ‘லிவ்-இன்’ உறவில் வாழ்ந்து வருகிறார் என்றும் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து, குஞ்சா தேவியையும், அவரது காதலரையும் போலீசார் டெல்லியில் கைது செய்து, பீகாருக்கு அழைத்து வந்துள்ளனர். இவர்கள் மீதான பொய்யான வழக்குகள் குறித்துக் குற்றவியல் நடவடிக்கை தொடரும் என்று போலீசார் தெரிவித்தனர்.
