சென்னை : பனையூரில் அமைந்துள்ள தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைமை அலுவலகத்தில் இன்று (டிச. 11) மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்டக் கழகச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், அண்மையில் தவெகவில் இணைந்த செங்கோட்டையன், நாஞ்சில் சம்பத், நிர்வாகிகள் என். ஆனந்த், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கட்சியின் வரவிருக்கும் தேர்தல் நடவடிக்கைகள் குறித்து விரிவான பேச்சுவார்த்தை நடைபெற்ற இதன் முடிவில், பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன்படி நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானங்கள், திமுக ஆட்சியை அகற்றும் நோக்கில், தவெக தலைவர் விஜய்யை முதலமைச்சராக ஏற்றுக்கொண்டு, அவரின் தலைமையை விரும்பி கட்சியில் இணைய விரும்புவோருக்கு அரவணைப்பு.
தேர்தல் கூட்டணி குறித்த அனைத்து இறுதி முடிவுகளையும் எடுக்க கட்சித் தலைவர் விஜய்க்கு முழு அதிகாரம் வழங்குதல். தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தைக்காக சிறப்பு குழு அமைத்தல்; இதில் இறுதி முடிவு விஜய்யின் கையிலேயே இருக்கும் என தீர்மானம். தேர்தல் வாக்குறுதிகள் உருவாக்கும் சிறப்பு குழு அமைத்தல்; இதிலும் முடிவெடுக்கும் அதிகாரம் தலைவர் விஜய்க்கு ஒப்படைப்பு. வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு வலிமையான பரப்புரையை முன்னெடுக்க முடிவு. மேலும் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள், கட்சியின் தேர்தல் முன்னேற்பாடுகள் வேகமெடுத்து வருவதாகக் காட்டுவதாக தவெக நிர்வாகிகள் தெரிவித்தனர்.
