மக்களவைத் தேர்தல் நெருங்குவதால், தமிழகத்தில் தி.மு.க. கூட்டணிக்கு எதிராக வலுவானக் கூட்டணியை அமைப்பதற்காக, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஒரு கச்சிதமான வியூகத்தை வகுத்து வருவதாகக் கூறப்படுகிறது.
இதில், அவர் எடப்பாடி பழனிசாமியை (இ.பி.எஸ்.) சமாதானப்படுத்த பா.ஜ.க. மூத்தத் தலைவரான நயினார் நாகேந்திரனையும், அதே சமயம் இ.பி.எஸ்.ஸுக்குப் பிடிக்காத ஓ.பன்னீர்செல்வம் (ஓ.பி.எஸ்.) மற்றும் டி.டி.வி. தினகரன் ஆகியோரைத் தன் கட்டுக்குள் வைத்திருக்கப் பா.ஜ.க. முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலையையும் அழகாகப் பயன்படுத்தி வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதிமுக தலைமைக்குப் பிடிக்காத ஓ.பி.எஸ். மற்றும் தினகரன் ஆகியோருடன் அண்ணாமலை நெருக்கமாகப் பழகுவது, இ.பி.எஸ்-க்கு வெளிக்காட்ட முடியாதக் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால், ஓ.பி.எஸ். மற்றும் தினகரன் ஆகியோர் வேறெந்த திசையிலும் சென்றுவிடாமல் இருக்க ஒரு ‘அணை’ போல அண்ணாமலையைப் பயன்படுத்த அமித் ஷா முடிவெடுத்துள்ளார்.
2026 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க.வைத் தமிழகத்தைவிட்டுத் துடைத்து எறியப்படும் என்று ஆவேசப்பட்டிருக்கும் அமித் ஷா, அதிமுக-வுக்கு வெளியில் இருக்கும் அக்கட்சியின் முக்கியத் தலைவர்களைக் கூட்டணிக்குள் கொண்டு வர அண்ணாமலைக்கு சில பணிகளை (Assignments) வழங்கியிருப்பதாகவும், இதன் ஒரு பகுதியாகவே அண்ணாமலை ஓ.பி.எஸ். மற்றும் தினகரனைச் சந்தித்துப் பேசி வருவதாகவும் பா.ஜ.க. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
