தமிழகத்தில் 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, பிரதான கட்சிகளான திமுக மற்றும் அதிமுக தங்களது கூட்டணிக் கணக்குகளைத் தீவிரப்படுத்தியுள்ளன. ‘ஒவ்வொரு ஓட்டும் முக்கியம்’ என்ற நோக்கில், சிறிய கட்சிகள் முதல் மாற்றுக் கட்சிப் பிரபலங்கள் வரை வளைத்துப் போடுவதில் இரு கட்சிகளும் மும்முரம் காட்டி வருகின்றன.
குறிப்பாக, பாமக, அமமுக, தேமுதிக போன்ற கட்சிகளைத் தங்கள் பக்கம் இழுப்பதில் பாஜக-அதிமுக தரப்பு காட்டிய வேகம், அக்கூட்டணிக்கு ஒரு பலமான கட்டமைப்பை உருவாக்கியுள்ளது.
பல ஆண்டுகளாகப் பிரிந்திருந்த எடப்பாடி பழனிசாமி – டிடிவி தினகரன் ஆகியோர் பாஜகவின் சமாதான முயற்சியால் கைகோர்த்துள்ளதும், ஓபிஎஸ் ஆதரவாளர்களாக இருந்த வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் போன்றோர் திமுக பக்கம் சாய்ந்துள்ளதும் தற்போதைய கள எதார்த்தத்தை மாற்றியமைத்துள்ளன.
அதேசமயம், வரும் தேர்தலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்பட்ட நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகம், வலுவான கூட்டணி அமைப்பதில் பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
தேமுதிக, அமமுக போன்ற கட்சிகள் தவெக-வை நோக்கித் தொடக்கத்தில் விருப்பம் காட்டியபோதிலும், விஜய்யின் முடிவெடுப்பதில் நிலவும் காலதாமதம் மற்றும் அனுபவமின்மை காரணமாக அந்த வாய்ப்புகள் கைநழுவியுள்ளதாகக் கூறப்படுகிறது.
மேலும், விஜய்யைச் சுற்றி இருப்பவர்களின் அணுகுமுறை லட்டு போன்ற கூட்டணி வாய்ப்புகளைச் சிதைத்துவிட்டதாகவும், இதன் விளைவாக இத்தேர்தலில் எவ்விதப் பெரிய கூட்டணியும் இன்றி அவர் தனித்துத் தான் போட்டியிட வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளார் என்றும் பார்வையாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். மேலும் நடிகர்கள் விஜய் ஆட்சி அதிகாரத்தில் பங்கு தரப்படும் என்ற அதிரடியான அறிவிப்பை வெளியிட்டு மற்றவர்களை கவர்ந்தாலும் கூட்டணி விவகாரத்தில் அவர் சரியான நிலைப்பாட்டை எடுக்காததால் தான் அவருடன் எந்த கட்சிகளும் கூட்டணிக்கு முன் வரவில்லை என்று கூறப்படுகிறது. அதே நேரத்தில் இன்னும் தேமுதிக மற்றும் பாமக தரப்பில் ராமதாஸ், ஓபிஎஸ் ஆகியோர் கூட்டணி முடிவுகளை அறிவிக்காத நிலையில் இவர்கள் ஆவது விஜய்க்கு சாதகமாக முடிவு எடுப்பார்களா அல்லது திமுக, அதிமுக பக்கம் நகர்வர்களா என்று அரசியல் வட்டாரத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.
