தமிழக வெற்றிக் கழகத்தின் செயல்வீரர்கள் கூட்டத்தில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் பேசிய பேச்சு, அதிமுக வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. “கடந்த 50 ஆண்டுகால அரசியல் வரலாற்றில் நான் எத்தனையோ தலைவர்களைப் பார்த்திருக்கிறேன். ஆனால், தவெக தலைவர் விஜயைப் போன்ற ஒரு தலைவரை நான் இதுவரை பார்த்ததே இல்லை” என்று அவர் உணர்ச்சிவசப்பட்டுப் பேசினார். அதிமுக-வின் மூத்த முகமாக அறியப்பட்ட ஒருவர், கட்சி மாறிச் சென்ற கையோடு விஜய்க்கு இப்படியொரு ‘மெகா சர்டிபிகேட்’ கொடுத்தது அதிமுக தலைமையை நிலைகுலையச் செய்துள்ளது.
செங்கோட்டையனின் இந்த ஆக்ரோஷமான கருத்துக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, அதிமுக மாவட்டச் செயலாளர் ஏ.கே. செல்வராஜ் மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். “புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சித்தலைவி ஜெயலலிதா மற்றும் எடப்பாடியார் எனப் பெரும் ஆளுமைகளுடன் பயணித்த நீங்கள், இன்று விஜயைப் புகழ்வது என்ன நியாயம்? எம்.ஜி.ஆரை விடவும், ஜெயலலிதாவை விடவும் விஜய் பெரியவரா?” என்று ஆவேசமாகக் கேள்வி எழுப்பினார். மேலும், “ஒரு மாவட்டச் செயலாளராக இதை உங்களிடம் கேட்பது எனக்கு அவமானமாக இருக்கிறது. இது என்ன பொழப்பு?” என்று செங்கோட்டையனை நோக்கிப் பகிரங்கமாகச் சாடியுள்ளது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
