ஊழல் செய்ய மாட்டேன் என்று கூறும் நடிகர் விஜய், தான் வாங்கிய வெளிநாட்டு காருக்கே வரி செலுத்தாமல் நீதிமன்றம் வரை சென்றவர் என்பதைத் தமிழக மக்கள் மறக்கவில்லை என்று முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் விமர்சித்துள்ளார்.

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது: தமிழகத்தில் ஜாதி, மதம் மற்றும் கருத்தியல் ரீதியாகப் பிளவுகளை உண்டாக்கி, மாநிலக் கட்சிகளைப் பலவீனப்படுத்துவதே பா.ஜ.க.வின் நோக்கம். ஓபிஎஸ்-ஐ நம்ப வைத்து கழுத்தறுத்த பா.ஜ.க., தற்போது டிடிவி தினகரனையும் தனது வலைக்குள் வைத்துள்ளது. சிறையில் அடைத்தவர்களிடமே தற்போது அவர் கூட்டணி வைத்துள்ளார். சில நாட்களுக்கு முன்பு வரை எடப்பாடி பழனிசாமி மற்றும் பா.ஜ.க.வைப் பற்றி தினகரன் பேசிய விமர்சனங்களை மக்கள் இன்னும் மறக்கவில்லை.

சசிகலாவிற்கு எடப்பாடி பழனிசாமி துரோகம் செய்ததைப் போலவே, ஓபிஎஸ் தரப்பில் இருந்தவர்களும் தற்போது பதவிக்காக இபிஎஸ் பக்கம் சென்றுவிட்டனர். பா.ஜ.க.வின் இத்தகைய மோசடி வேலைகளும், பிரித்தாளும் சூழ்ச்சிகளும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இருக்கும் வரை இந்த மண்ணில் எடுபடாது. தமிழகத்தில் பா.ஜ.க. காலூன்ற முடியாது.

தேர்தல் களம் என்பது ஓட்டப்பந்தயம் போன்றது. அதில் ஓடி வெற்றி பெறத் தகுதியான வீரர் வேண்டும். விசிலை வாயில் வைத்து ஊத மட்டுமே முடியும், அது வெற்றியைத் தந்துவிடாது. ஒருவர் இருவர் விசில் ஊதினால் நன்றாக இருக்கும், ஆனால் கூட்டமாகச் சேர்ந்து கூச்சல் போட்டால் மக்கள் வெறுப்படைந்து விடுவார்கள். தேர்தல் களத்தில் பா.ஜ.க. கூட்டணிக்கு மக்கள் உரிய பாடம் புகட்டுவார்கள். இவ்வாறு அவர் கூறினார். மேலும் காளை மாடு கூட கன்று போடலாம் ஆனால் பாஜகவால் ஒருபோதும் தமிழ்நாட்டில் காலூன்ற முடியாது என்று கூறினார்.