தமிழக அரசியலில் ஆளும் திமுகவை மட்டுமே இதுவரை விமர்சித்து வந்த தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், தற்போது அதிமுகவையும் கடுமையாகச் சாடியுள்ளார். இதற்குப் பதிலடியாக அதிமுக மற்றும் முக்குலத்தோர் புலிப்படைத் தலைவர் கருணாஸ் ஆகியோர் விஜய் மீது கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளனர்.

நேற்று நடைபெற்ற தவெக செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய விஜய், திராவிடக் கட்சிகள் இரண்டையுமே ஒரே தட்டில் வைத்து விமர்சித்தார். அவர் பேசியதாவது: “திமுக ஒரு தீய சக்தி என்றால், அதிமுக ஒரு ஊழல் அடிமைக் கட்சி. ஆண்ட கட்சியும், ஆண்டு கொண்டிருக்கும் கட்சியும் ஊழலில் திளைக்கின்றன. இவர்கள் அண்ணாவின் பெயரைச் சொல்லிக்கொண்டு அவரின் கொள்கைகளைத் தூக்கி எறிந்துவிட்டனர். அதிமுக பாஜகவுக்கு அடிமையாகக் கிடக்கிறது. என் மீது ஒருபோதும் ஊழல் கறை படியாது; ஊழலற்ற ஆட்சியைத் தருவதே எனது இலக்கு என்றார்.

விஜய்யின் இந்த விமர்சனத்திற்கு அதிமுக தகவல் தொழில்நுட்ப அணியினர் சமூக வலைதளங்களில் கடுமையான எதிர்வினையாற்றி வருகின்றனர். “சொந்தப் படத்தில் ‘பிளாக் டிக்கெட்’ மூலம் கோடி கோடியாகச் சம்பாதிக்கும் விஜய்தான் முதல் ஊழல்வாதி. அவர் ஒரு பனையூர் பண்ணையார்” என அவர்கள் விமர்சித்துள்ளனர்.

இந்த நிலையில் இன்று விருதுநகரில் செய்தியாளர்களிடம் பேசிய முக்குலத்தோர் புலிப்படைத் தலைவர் கருணாஸ், விஜய்யின் ஊழல் எதிர்ப்புப் பேச்சை எள்ளி நகையாடினார். அவர் கூறுகையில், “தான் வாங்கிய வெளிநாட்டு காருக்கு முறையாக நுழைவு வரி கட்டாமல் நீதிமன்றம் சென்றவர் விஜய். அந்த வழக்கை இந்தத் தமிழகம் இன்னும் மறக்கவில்லை. சொந்தக் காருக்கே வரி கட்டத் தயங்கியவருக்கு, ஊழலைப் பற்றிப் பேச என்ன தகுதி இருக்கிறது? இதை மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்,” எனச் சாடினார்.