சினிமாவில் டபுள் ரோல் நடிப்பது போல அரசியலில் பேசக்கூடாது; கொள்கை எதிரி, புடலங்காய் எதிரி என்று வீட்டுக்குள் உட்கார்ந்து டயலாக் பேசாமல், விஜய் முதலில் மக்களைச் சந்திக்க வெளியே வர வேண்டும்” என்று அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

தேனியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் மேலும் கூறியதாவது: ஊழலை ஒழிப்போம் என்று பேசும் விஜய், தனது படங்களின் டிக்கெட்டுகள் 150 ரூபாய்க்குப் பதில் 2000 ரூபாய்க்கு ‘பிளாக்’கில் விற்கப்படுவதை முதலில் தடுத்து நிறுத்தட்டும். அந்த ஊழலையே ஒழிக்க முடியாதவர், நாட்டைப் பற்றிப் பேசுகிறார். அண்ணாதுரையை நாங்கள் மறந்துவிட்டதாகக் கூறுகிறார். அண்ணாவின் இதயக்கனி எம்.ஜி.ஆர். தொடங்கிய இயக்கம் இது. அண்ணாவைத் தமிழகம் என்றும் மறக்காது. புதுசாக அரசியலுக்கு வந்துவிட்டு அவர் வேடிக்கையாகப் பேசிக்கொண்டிருக்கிறார்.

எங்கள் தலைவர் எம்.ஜி.ஆர். படத்தை வைத்துக்கொண்டு ஓட்டு கேட்கும் விஜய், அதே சமயம் எம்.ஜி.ஆர். ஆட்சியில் ஊழல் நடந்ததாகக் கூறுவது முரணாக உள்ளது. நாங்கள் எல்லாம் வெகுண்டு எழுந்தால் அது தப்பாகிவிடும். தைரியம் இருந்தால் முதலில் வீட்டுக்கு வெளியே வந்து ஊடகங்களைச் சந்தியுங்கள்; அப்போதுதான் உங்களுக்கு நாட்டு நடப்பு புரியும். தேர்தலில் போட்டியிட்டு ஆட்சி அமைத்துக் காட்டுங்கள், அப்புறம் பேசலாம்.

ஓ.பி.எஸ். அவர்கள் ஜெயலலிதாவின் உண்மைத் தொண்டர். அவர் தர்மயுத்தம் தொடங்காமல் இருந்திருந்தால், சசிகலா தலைமையில் மீண்டும் முதல்வராக வந்திருப்பார். தற்போது அவருக்குச் சில தர்மசங்கடங்கள் உள்ளன. இருப்பினும், வரும் தேர்தலில் அவர் எங்களது கூட்டணியில் இணைவார் என நம்புகிறேன்.

ஜெயலலிதா இருந்த இடத்தில் இப்போது பிரதமர் மோடியை நாங்கள் பார்க்கிறோம். அவர் தமிழகத்தை முதன்மை மாநிலமாக மாற்றுவார். வரும் 2026 சட்டமன்றத் தேர்தலே தமிழகத்தின் உண்மையான விடியலாக இருக்கும். இந்தத் தேர்தலில் நான் போட்டியிடப் போவதில்லை. என்னுடன் இருப்பவர்களை வெற்றி பெறச் செய்து, அவர்களை அமைச்சர்களாகப் பார்க்க வேண்டும் என்பதே எனது ஆசை. அதற்காக நான் யாருக்கும் அழுத்தம் தரமாட்டேன். இவ்வாறு அவர் கூறினார்.