அதிகார திமிருடன் பேசுபவர்களுக்குப் பாடம் புகட்ட வேண்டிய காலம் வந்துவிட்டது” என திமுக மாவட்டச் செயலாளர் கோ. தளபதியின் விமர்சனத்திற்கு காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் மிகக் காட்டமான பதிலடி கொடுத்துள்ளார். இதனால் மதுரை அரசியல் களத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மதுரை சுப்பிரமணியபுரத்தில் நடைபெற்ற மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் பேசிய திமுக மதுரை வடக்கு தொகுதி எம்.எல்.ஏ. கோ. தளபதி, காங்கிரஸ் கட்சியை மிகக் கடுமையாகச் சாடினார். அவர் பேசியதாவது:

“காங்கிரஸில் மாணிக்கம் தாகூர், ஜோதிமணி போன்றவர்கள் எம்.பி-க்களாகி விட்டனர். அவர்களுக்கு அடுத்த தேர்தலில் யார் எம்.எல்.ஏ-வானால் என்ன கவலை? இப்போது ஒவ்வொரு விஷயத்திலும் பங்கு கேட்கிறார்கள். வார்டுகளில் ‘பூத்’ கமிட்டி அமைக்க ஆள் இல்லாத கட்சி காங்கிரஸ். ஒரு தொகுதிக்கு 4,000 ஓட்டுகளை மட்டுமே வைத்துள்ள அவர்கள் இவ்வளவு பேசுவது வேதனையளிக்கிறது. இந்தியா கூட்டணி டெல்லியில் பேசப்படுவதற்கு முதல்வர் ஸ்டாலின்தான் காரணம். இவர்களுக்கு அடுத்த முறை சீட் கொடுக்கக்கூடாது.”

திமுக எம்.எல்.ஏ-வின் இந்தப் பேச்சைத் தொடர்ந்து, காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் தனது ‘எக்ஸ்’ வலைதளப் பக்கத்தில் உடனடியாக எதிர்வினையாற்றினார். அதில் அவர் கூறியிருப்பதாவது: “மதுரை வடக்கு தொகுதியில் (கோ. தளபதி தொகுதி) இந்த முறை காங்கிரஸ் வேட்பாளர் போட்டியிட வேண்டும் என்று அகில இந்திய காங்கிரஸ் தலைவர் கார்கேவிடம் கோரிக்கை வைப்பேன். தன்மானம் காக்க சிலருக்குப் பாடம் புகட்ட வேண்டும். அதிகார திமிருடன் இருந்தால் தோழமை கட்சிகள் அமைதியாக இருக்கும் காலம் முடிந்துவிட்டது.”

காங்கிரஸ் கட்சி தொடர்ந்து ஆட்சியில் பங்கு மற்றும் கூடுதல் தொகுதிகள் குறித்துப் பேசி வருகிறது. மாணிக்கம் தாகூரின் இந்த அதிரடிப் போக்கு, திமுகவுடனான தொகுதிப் பங்கீட்டில் வலிமையை அதிகரிக்கவா அல்லது காங்கிரஸ் கட்சி மாற்றுப் பாதையை (தவெக போன்றவை) நோக்கிச் செல்கிறதா என்ற விவாதத்தைத் தமிழக அரசியலில் கிளப்பியுள்ளது. மேலும் திமுக மாவட்டச் செயலாளரும், காங்கிரஸ் எம்.பி-யும் பகிரங்கமாக மோதிக் கொள்வது இந்தியா  கூட்டணிக்குள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.