தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், மாநாடுகளிலும் கூட்டங்களிலும் மட்டுமே பேசுவதாகவும், மக்களின் உண்மையான போராட்டங்களில் அவர் பங்கேற்பதில்லை என்றும் பாஜக நிர்வாகியும் நடிகையுமான கஸ்தூரி விமர்சித்துள்ளார். மாமல்லபுரத்தில் நடைபெற்ற தவெக செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய விஜய், திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளையும் கடுமையாகச் சாடினார். “முன்பு ஆட்சி செய்த அதிமுக நேரடியாகப் பாஜகவிடம் சரணடைந்துவிட்டது.
இப்போதுள்ள திமுக வேடம் கலைந்துவிடக் கூடாது என்பதற்காகப் பல வண்ணங்களில் அறிவிப்புகளை வெளியிட்டு, மறைமுகமாகச் சரணடைந்துள்ளது. நான் ஒரு பைசா கூட ஊழல் செய்ய மாட்டேன்; என் மீது ஊழல் கறை படியவும் விடமாட்டேன்” என்று ஆவேசமாகப் பேசினார். இதன் மூலம் விஜய் முதல்முறையாகப் பாஜகவின் பெயரைச் சொல்லி நேரடியாக விமர்சித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விஜய்யின் இந்தப் பேச்சு குறித்துக் காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய நடிகை கஸ்தூரி கூறியதாவது: “நடிகர் விஜய் மாநாட்டில் மட்டுமே பேசுகிறார். கடந்த ஓராண்டில் தமிழகத்தில் எத்தனையோ போராட்டங்கள் நடந்தன; எதிலும் அவர் கலந்துகொள்ளவில்லை. ‘ஜனநாயகன்’ திரைப்பட விவகாரத்தில் பல தலைவர்கள் குரல் கொடுத்தபோது விஜய் ஏன் மௌனம் காத்தார்? ஊழலைத் தட்டிக்கேட்பேன் என்று சொல்லும் விஜய், இந்த விவகாரத்தில் பேசாதது ஏன் என்று மக்கள் கேட்கிறார்கள்.” தொடர்ந்து திமுகவைச் சாடிய அவர், “இந்தியைப் படிக்கக் கூடாது என்பவர்கள், தங்கள் வீட்டுப் பிள்ளைகளை மட்டும் பள்ளிகளில் இந்தி படிக்க வைக்கிறார்கள். ஏழை மாணவர்கள் இலவசமாக இந்தி கற்பதை திமுக விரும்புவதில்லை. கடந்த முறை செங்கல்லைக் காட்டி ஏமாற்றியது போல், இந்த முறை எதை எடுத்துக் கொண்டு வந்தாலும் தேர்தல் முடிவு அவர்களுக்குப் பாடமாக அமையும்” என்று தெரிவித்தார்.
