உலகக் கோப்பை போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இன்று அகமதாபாத்தில் மோதுகிறது..

இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) அடுத்த சில நாட்களுக்கு அகமதாபாத்தில் மழை பெய்யும் என்று முன்னறிவித்திருந்தது, ஆனால் இன்று நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஐசிசி உலகக் கோப்பை 2023 போட்டியின் போது மேகங்கள் தெளிவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று (அக்டோபர் 14)  அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் முக்கியமான ஐசிசி உலகக் கோப்பை 2023 போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி, பாகிஸ்தானை எதிர்த்து மோதுகிறது. அகமதாபாத் ஸ்டேடியத்தில்  1லட்சத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் இன்று இந்த மெகா போட்டியை பார்க்க வருவார்கள். அகமதாபாத் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவும், பாகிஸ்தானும் மொத்தமாக தங்களின் 8வது ஒருநாள் உலகக் கோப்பையில் மோதுகிறது. இரு அணிகளுமே தங்களது முதல் 2 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. இதனால் ஹாட்ரிக் வெற்றி பெற இரு அணிகளும் முயற்சிக்கும்..

இந்தியா தனது முதல் ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான ஆஸ்திரேலியாவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது மற்றும் 2வது போட்டியில் ஆப்கானிஸ்தானை 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்தியா புள்ளி பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது. இந்த முதல் 2 போட்டியிலும் விராட் கோலி 140 ரன்களுடன் இந்தியாவின் முன்னணி ரன்களை எடுத்தவராக உள்ளார். மேலும் ஜஸ்பிரித் பும்ரா 2 போட்டிகளில் 6 விக்கெட்டுகளுடன் பந்துவீச்சு தரவரிசையில் முன்னணியில் உள்ளார்.

அதேபோல பாபர் அசாம் தலைமையிலான அணி 2 போட்டிகளில் இரண்டு வெற்றிகளுடன் தங்கள் உலகக் கோப்பை பயணத்தில் சரியான தொடக்கத்தை பெற்றுள்ளது. முதலில் பாகிஸ்தான் 81 ரன்கள் வித்தியாசத்தில் நெதர்லாந்தை தோற்கடித்து, பின்னர் இலங்கைக்கு எதிராக 345 ரன்களை துரத்தி சாதனை வெற்றியை பதிவு செய்தது, புள்ளிகள் பட்டியலில் 4வது இடத்தைப் பிடித்தது. பாபர் அசாம் இதுவரை 2 போட்டிகளிலும் 15 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். ஆனால் முகமது ரிஸ்வான் 2 இன்னிங்ஸ்களில் 199 ரன்களுடன்சிறப்பான பார்மில் உள்ளார்.

இந்தியா vs பாகிஸ்தான் அகமதாபாத் வானிலை முன்னறிவிப்பு :

இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) முன்னதாக சனிக்கிழமை (இன்று) அகமதாபாத்தில் லேசான மழை பெய்யும் என்று கணித்திருந்தது, ஆனால் சமீபத்திய மற்றும் புதுப்பிக்கப்பட்ட அறிக்கைகள் விளையாட்டின் போது தெளிவான வானம் இருப்பதாக தெரிவிக்கின்றன. 47% ஈரப்பதத்துடன் விளையாட்டின் போது வெப்பநிலை 34-30 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சனிக்கிழமைக்கான கூகுள் வானிலையின் படி, விளையாட்டு நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு 3% மட்டுமே உள்ளது மற்றும் ரசிகர்கள் தெளிவான வானத்தையும் எதிர்பார்க்கலாம்.

இதற்கிடையே நேற்று பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் சுப்மன் கில் விளையாடுவாரா? இந்த கேள்விக்கு ரோஹித் கூறுகையில், அவர் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டிக்கான தேர்வுக்கு கில் 99 சதவீதம் உடல் தகுதியுடன் இருக்கிறார். நாளை (சனிக்கிழமை, அதாவது இன்று) அதைப் பற்றி யோசிப்போம்” என்று தெரிவித்துள்ளார். எனவே கில் களமிறங்குவாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்..

ஒருநாள் உலக கோப்பையில் அனைத்து போட்டியிலும் இந்தியா வெற்றி :

ஒருநாள் உலக கோப்பையில் இந்தியா விளையாடிய 7 போட்டிகளிலும் பாகிஸ்தானை வீழ்த்தி வரலாற்றை படைத்துள்ளது. இதனை மாற்றியமைக்க பாகிஸ்தான் கடுமையாக முயற்சிக்கும். அதேசமயம் இந்த சாதனையை அப்படியே தக்கவைக்க இந்தியா போராடும் என்பதால் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. இந்தியா – பாகிஸ்தான் இடையே இன்று அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் 2 மணிக்கு போட்டி தொடங்குகிறது..

1992- இந்தியா 43 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

1996- இந்தியா 39 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

1999- இந்தியா 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

2003- இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

2011- இந்தியா 29 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

2015- இந்தியா 76 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

2019- இந்தியா 89 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்திய உலகக் கோப்பை அணி :

ரோஹித் சர்மா (கே), ஹர்திக் பாண்டியா (து.கே), சுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல், இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், குல்தீப் யாதவ், ரவிச்சந்திரன் அஸ்வின், முகமது ஷமி ,

பாகிஸ்தான் உலகக் கோப்பை அணி :

பாபர் அசாம் (கே), ஷதாப் கான் (து.கே), ஃபக்கர் ஜமான், இமாம் உல் ஹக் , அப்துல்லா ஷபீக், முகமது ரிஸ்வான், சவுத் ஷகீல், இப்திகார் அகமது, சல்மான் அலி ஆகா, முகமது நவாஸ், உசாமா மிர், ஹாரிஸ் ரவூப் , ஹசன் அலி , ஷஹீன் அப்ரிடி, முகமது வாசிம்.