பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் சுப்மன் கில் 99 சதவிகிதம் இருக்கிறார் என்று இந்திய கேப்டன் ரோஹித் சர்மா கூறினார்.

2023 ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான பெரிய போட்டிக்கு முன் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா செய்தியாளர் சந்திப்பை நடத்தினார். அப்போது அணியில் இளம் தொடக்க ஆட்டக்காரர் சுப்மன் கில் உடற்தகுதி குறித்து ரோஹித் ஷர்மா பெரிய தகவலை வழங்கினார். டெங்கு காரணமாக, உலகக் கோப்பையின் முதல் 2 போட்டிகளில் சுப்மனால் விளையாட முடியவில்லை. சுப்மன் கில்லுக்கு பிளேட்லெட் எண்ணிக்கை குறைந்ததால், சென்னையில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின் ஓரளவு குணமடைந்த பிறகு,  புதன்கிழமை (11ஆம் தேதி) அகமதாபாத்தை அடைந்த கில், நேற்று முன்தினம் வியாழக்கிழமையும் வலைப் பயிற்சியில் ஈடுபட்டார். தற்போது கில் இறுதி 11-ல் இடம் பெறுவாரா என்ற ஆர்வம் அனைவரிடமும் உள்ளது.

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் சுப்மான் கில் விளையாடுவாரா? இந்த கேள்விக்கு ரோஹித் கூறுகையில், அவர் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டிக்கான தேர்வுக்கு கில் 99 சதவீதம் உடல் தகுதியுடன் இருக்கிறார். நாளை (சனிக்கிழமை, அதாவது இன்று) அதைப் பற்றி யோசிப்போம்” என்று தெரிவித்துள்ளார்.

ஒருநாள் உலகக் கோப்பையில் இதுவரை பாகிஸ்தானுக்கு எதிராக 7 ஆட்டங்களில் விளையாடியுள்ள இந்திய அணி, அனைத்துப் போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. 2023 உலகக் கோப்பையின் முதல் ஆட்டத்தில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. அதன்பின் டெல்லியில் நடந்த போட்டியில் 8 விக்கெட்டுகள் மற்றும் 90 பந்துகள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தி வெற்றி பெற்றது. அதேசமயம் பாகிஸ்தான் அணி நெதர்லாந்து மற்றும் இலங்கையை வீழ்த்தியுள்ளது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் இரு அணிகளும் விளையாடிய 2 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.

சுப்மன் கில் சில காலமாக வலுவான ஃபார்மில் உள்ளார். ஆசிய கோப்பையில் சதம் அடித்த அவர், அதன் பிறகு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் சதம் அடித்தார். செப்டம்பர் மாதத்திற்கான ஐசிசியின் சிறந்த வீரராக சுப்மன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கடந்த மாதம் 80 சராசரியில் 480 ரன்கள் எடுத்தார். ஐசிசி ஒருநாள் தரவரிசையில் இரண்டாவது இடத்தில் உள்ளார். அவருக்கும், முதல் இடத்தில் இருக்கும் பாபர் அசாமுக்கும் 5 புள்ளிகள் வித்தியாசம் மட்டுமே உள்ளது குறிப்பிடத்தக்கது..

ஒருநாள் உலக கோப்பையில் அனைத்து போட்டியிலும் இந்தியா வெற்றி :

ஒருநாள் உலக கோப்பையில் இந்தியா விளையாடிய 7 போட்டிகளிலும் பாகிஸ்தானை வீழ்த்தி வரலாற்றை படைத்துள்ளது. இதனை மாற்றியமைக்க பாகிஸ்தான் கடுமையாக முயற்சிக்கும். அதேசமயம் இந்த சாதனையை அப்படியே தக்கவைக்க இந்தியா போராடும் என்பதால் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. இந்தியா – பாகிஸ்தான் இடையே இன்று அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் 2 மணிக்கு போட்டி தொடங்குகிறது..

1992- இந்தியா 43 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

1996- இந்தியா 39 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

1999- இந்தியா 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

2003- இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

2011- இந்தியா 29 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

2015- இந்தியா 76 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

2019- இந்தியா 89 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.