தமிழ்நாட்டில் சட்டவிரோதப் பட்டாசு உற்பத்தி அதிகரிப்பதற்குக் பிரதானக் காரணம், அதற்கான உரிய உரிமத்தைப் பெறுவதில் நிலவும் கடுமையான காலதாமதம் மற்றும் சிரமங்கள்தான் என்று தொழில் துறை அமைச்சர் கீர்த்தனா சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார். புதிய பட்டாசு ஆலைக்கான உரிமத்தைப் பெற குறைந்தது 3 ஆண்டுகள் வரை ஆவதாகவும், ஏற்கெனவே உள்ள உரிமத்தைப் புதுப்பிப்பதற்குக் கூட 1 ஆண்டு காலம் பிடிப்பதாகவும் சுட்டிக்காட்டிய அவர், இதனால் தொழிலாளர்கள் சட்டவிரோத உற்பத்தியை நோக்கித் தள்ளப்படும் சூழல் உருவாவதாகக் குறிப்பிட்டார்.
பட்டாசுத் தொழிலையும் அதை நம்பியிருக்கும் லட்சக்கணக்கான தொழிலாளர்களையும் ஊக்கப்படுத்துவதற்கான தீவிர நடவடிக்கைகளைத் தவெக அரசு எடுத்து வருகிறது என்று குறிப்பிட்ட அமைச்சர் கீர்த்தனா, “கடந்த 2005-ஆம் ஆண்டிலேயே நேரில் சென்று பட்டாசு ஆலை தொழிலாளர்களைச் சந்தித்து, அவர்களின் குறைகளையும் தேவைகளையும் கேட்டறிந்த ஒரே தலைவர் எங்கள் தலைவர் மட்டுமே. ஆட்சிக்கு வந்தவுடனேயே அவர்களின் பிரச்சனைகளைத் தீர்க்க வேண்டும் என்று எங்களிடம் முதன்மையாகப் பேசினார்” எனப் பேரவையில் நெகிழ்ச்சியுடன் நினைவு கூர்ந்தார்.
பட்டாசு உற்பத்தியாளர்கள் மற்றும் தொழிலாளர்களின் நீண்ட நாள் கோரிக்கைகளான உரிமம் வழங்கும் நடைமுறைகளை எளிமையாக்குவது மற்றும் புதுப்பித்தல் காலத்தைக் குறைப்பது தொடர்பாக அரசு விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கும் என்றும் அமைச்சர் உறுதியளித்தார். சட்டவிரோதப் பட்டாசு ஆலைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து, தொழிலாளர்களின் பாதுகாப்பையும் வாழ்வாதாரத்தையும் உறுதி செய்யத் தவெக அரசு எடுத்து வரும் இந்த நடவடிக்கைகள் பட்டாசு உற்பத்தி வட்டாரங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.
