தமிழகத்தில் இன்னும் இரு மாதங்களில் 17-வது சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு தொடர்பாகப் பெரும் இழுபறி நீடித்து வருகிறது. இந்நிலையில், டெல்லியில் ராகுல் காந்தியை திமுக எம்.பி. கனிமொழி சந்தித்துப் பேசியது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2021 தேர்தலின் போது 25 இடங்களில் போட்டியிட்டு 18 இடங்களை வென்ற காங்கிரஸ், இந்த முறை கூடுதல் பலத்துடன் களம் காண விரும்புகிறது. குறிப்பாக, “மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி” என திமுக பேசி வரும் நிலையில், தமிழகத்தில் ‘ஆட்சியில் பங்கு’ வேண்டும் என்பதை பிரதான கோரிக்கையாக காங்கிரஸ் முன்வைத்துள்ளது. இது திமுக தலைமைக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் பங்கேற்க டெல்லி சென்ற திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி., ராகுல் காந்தியை அவரது இல்லத்தில் சந்தித்து சுமார் 20 நிமிடங்கள் ஆலோனை நடத்தினார். இந்தச் சந்திப்பின் போது ராகுல் காந்தி தரப்பிலிருந்து முன்வைக்கப்பட்ட நிபந்தனைகள் திமுகவை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது: அதாவது தமிழக அமைச்சரவையில் ஆட்சியில் பங்கு. சட்டப்பேரவைத் தேர்தலில் 41 தொகுதிகள். கூடுதல் கோரிக்கையாக 2 மாநிலங்களவை (ராஜ்ய சபா) இடங்கள். உள்ளாட்சித் தேர்தலில் 20 சதவீத இட ஒதுக்கீடு போன்றவைகள் என்று கூறப்படுகிறது.
ராகுல் காந்தியின் கோரிக்கைகளை ஏற்க மறுத்த கனிமொழி, திமுகவின் நிலைப்பாட்டைத் தெளிவாக விளக்கியதாகக் கூறப்படுகிறது. “ஆட்சியில் பங்கு என்ற பேச்சுக்கே இடமில்லை; கடந்த முறையை விட கூடுதலாக 2 இடங்கள் (மொத்தம் 27) மட்டுமே தர முடியும். மாநிலங்களவை இடங்கள் மற்றும் உள்ளாட்சித் தேர்தல் இடங்கள் குறித்த கோரிக்கைகளை ஏற்க வாய்ப்பில்லை” என்று அவர் தடாலடியாகக் கூறிவிட்டதாகத் தெரிகிறது.
இந்தக் கருத்து மோதலால் திமுக – காங்கிரஸ் கூட்டணி நீடிக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஒருவேளை காங்கிரஸ் கூட்டணியை விட்டு வெளியேறினாலும், புதிய கட்சிகளை உள்ளே இழுப்பதன் மூலம் அந்த வாக்கு இழப்பைச் சரிசெய்துவிடலாம் என திமுக தலைமை கணக்கு போடுகிறது. கூட்டணிக்கு மேலும் சில கட்சிகள் வர வாய்ப்புள்ளதாக கனிமொழி எம்.பி. சூசகமாகத் தெரிவித்துள்ளதால், தமிழக தேர்தல் களம் தற்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. மேலும் அதே நேரத்தில் திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணியில் எந்த பிரச்சனையும் கிடையாது என கனிமொழி கூறியதும் குறிப்பிடத்தக்கது.
