“இந்தியா” கூட்டணியில் திமுக – காங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை சூடுபிடித்துள்ள நிலையில், மதுரை திமுக நிர்வாகியின் கருத்துக்கு காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அதாவது மதுரையில் அண்மையில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய திமுக நிர்வாகி கோ.தளபதி, “நாங்கள் இல்லாவிட்டால் இந்தியா கூட்டணியே கிடையாது” என்று குறிப்பிட்டிருந்தார். இது காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய விருதுநகர் எம்.பி. மாணிக்கம் தாகூர் கூறியதாவது: “தமிழக காங்கிரஸின் நிலைப்பாடு குறித்து ஆலோசிக்க 39 தலைவர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டு, அவர்கள் மல்லிகார்ஜுன கார்கே முன்னிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்து கருத்துகளைப் பகிர்ந்துள்ளனர். அதற்கு முன்னதாக கனிமொழி எம்.பி., ராகுல் காந்தியைச் சந்தித்தது குறித்து வெளியாகும் செய்திகள் அனைத்தும் வெறும் கற்பனை கதைகளே.
மதுரை வடக்குத் தொகுதியை காங்கிரஸுக்கு ஒதுக்க வேண்டும் என்று கட்சித் தலைமையிடம் வலியுறுத்தியுள்ளேன். எங்களைப் பொறுத்தவரை காங்கிரஸ் கட்சியை யார் அவமானப்படுத்தினாலும், இழிவுபடுத்தினாலும் அவர்களுக்கு எந்தத் தயவு தாட்சண்யமும் காட்டப் போவதில்லை. காங்கிரஸாரைப் பொறுத்தவரை கட்சியின் தன்மானமே மிக முக்கியம்.
கூட்டணியில் இருந்துகொண்டே காங்கிரஸ் தொண்டர்களைக் கொச்சைப்படுத்தும் வகையில் பேசும் நிர்வாகிகள் மீது திமுக தலைமை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே ஒவ்வொரு தொண்டனின் கோரிக்கை.
மதுரை வடக்குத் தொகுதியில் வரும் 13-ஆம் தேதி நடைபெறும் பி.எல்.ஏ. (PLA) கூட்டத்தில் காங்கிரஸின் பலத்தை நிரூபிப்போம். காங்கிரஸ் தொண்டர்கள் ‘வந்தே மாதரம்’, ‘ஜெய்ஹிந்த்’ மட்டும் சொல்பவர்கள் அல்ல; எங்களைத் தாக்கினால் திருப்பி அடிக்கவும் தெரியும். முதலில் தேர்தல் அறிவிக்கட்டும், கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீடு குறித்துப் பேசட்டும். அதன் பிறகு மற்றவற்றைத் தீர்மானிப்போம் என்று ஆவேசமாகத் தெரிவித்தார்.
