தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், மதவெறியை மாய்த்து, காந்தி பிறந்த மண்ணைப் பாதுகாக்க ஒன்றிணைந்து செயல்படுவோம் என மகாத்மா காந்தியின் 79-ஆவது நினைவுநாளையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது,

அமைதி வழியின் வலிமையை உலகுக்குக் காட்டி, மக்களிடையே ஒற்றுமையுணர்வு தழைக்கப் பாடுபட்டவர் நம் தேசத்தந்தை மகாத்மா காந்தி. அதன் காரணமாகவே அவர் கோட்சேவின் துப்பாக்கிக் குண்டுகளால் துளைக்கப்பட்டார். உடல் மறைந்தாலும், அவர் ஒவ்வொரு இந்தியரின் உள்ளத்திலும் நீக்கமற நிலைத்து வாழ்வார்.

மகாத்மா காந்தியின் கொள்கைகளை மறைத்து, நாட்டை நாசப்படுத்தத் துடிக்கும் ‘கோட்சேவின் வாரிசுகளுக்கு’ மக்கள் தக்க பாடம் புகட்ட வேண்டும். காந்தி பிறந்த இந்த மண்ணின் மாண்பைக் காத்திட நாம் அனைவரும் உறுதியேற்க வேண்டும். மதவெறியை மாய்ப்போம்! மகாத்மாவைப் போற்றுவோம்! இவ்வாறு அந்தப் பதிவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.