உத்தராகண்ட் மாநிலம் ஹல்த்வானியில் இளம்பெண் ஒருவரை இரு வாலிபர்கள் புல்லட் மோட்டார் சைக்கிளில் சுமார் 20 நிமிடங்கள் விரட்டிச் சென்று அநாகரிகமாக நடந்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட இளம்பெண் கடந்த மார்ச் 16-ஆம் தேதி இரவு ராஜ்புராவில் உள்ள தனது தோழியின் பிறந்தநாள் விழாவில் பங்கேற்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். இரவு 10 மணியளவில் தோழியின் சகோதரர் அந்தப் பெண்ணை மோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்றுள்ளார்.

ஸ்டேடியம் சாலை அருகே சென்றபோது, புல்லட்டில் வந்த இரு வாலிபர்கள் சைரன் ஒலியை எழுப்பியபடி இவர்களைப் பின்தொடர்ந்துள்ளனர். சுமார் 20 நிமிடங்கள் விடாமல் துரத்திய அந்த நபர்கள், ஜெயில் சந்திப்பு அருகே இளம்பெண்ணின் வாகனத்தை வழிமறித்து ரகளையில் ஈடுபட்டுள்ளனர்.

https://x.com/KumaonJagran/status/2034460399723278366?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2034460399723278366%7Ctwgr%5E741f944d4604b2e871272f240059fc5fd52da82b%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fd-1054352774148790654.ampproject.net%2F2603032146000%2Fframe.html

வழியை மறித்த அந்த நபர்கள், இளம்பெண்ணுக்குத் தொல்லை கொடுத்ததுடன், அவரை அழைத்து வந்த இளைஞரைக் கடுமையாகத் தாக்கி கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர். அங்கிருந்து தப்பிக்க முயன்றபோது, லாரிகளுக்கு இடையே சிக்கி நூல் இழையில் உயிர் தப்பியதாகப் பாதிக்கப்பட்ட பெண் வேதனையுடன் தெரிவித்துள்ளார். இறுதியில் பொதுமக்களின் உதவியுடன் அவர்கள் உயிர் தப்பியுள்ளனர்.

இது குறித்து நகரக் காவல் ஆய்வாளர் விஜய் மேத்தா கூறுகையில், “பாதிக்கப்பட்ட பெண்ணின் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு அஜய் ஃபர்த்யால் மற்றும் அஜய் தாப்பா ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட புல்லட் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இவர்களில் ஒருவர் பாஜ்பூரில் உள்ள பள்ளியில் பணியாற்றி வருகிறார்” என்றார். நைனிடால் எஸ்.எஸ்.பி மஞ்சுநாத் டி.சி கூறுகையில், பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ‘ஜீரோ டாலரன்ஸ்’ கொள்கை பின்பற்றப்படும் என எச்சரித்துள்ளார்.

மேலும் இந்தச் சம்பவம் நடந்த பகுதி காவல் நிலையம் மற்றும் உயர் அதிகாரிகளின் குடியிருப்புகள் நிறைந்த ‘ஹை செக்யூரிட்டி’ மண்டலமாகும். இளம்பெண் உதவி கேட்டுச் சத்தமிட்டும், அங்கு போலீசாரின் நடமாட்டம் இல்லாதது பொதுமக்களிடையே பெரும் அச்சத்தையும், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த கேள்வியையும் எழுப்பியுள்ளது.