மனைவியின் மொபைல் போனில் இருந்த “சிமெண்ட் மற்றும் டிரம்” என்ற மூன்று வார்த்தைகளைக் கண்டு மிரண்டு போன கணவர், தனது உயிரைக் காக்க மனைவியைக் கள்ளக்காதலனுடன் அனுப்பி வைத்த அதிர்ச்சிச் சம்பவம் உத்தரப் பிரதேசத்தில் அரங்கேறியுள்ளது. அதாவது புலந்த்ஷகர் பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவரது மனைவிக்கு வேறொரு இளைஞருடன் பழக்கம் இருந்துள்ளது. இதனால் கணவன் – மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. கடந்த ஆண்டு ஜூலை மாதம், தனது 6 மாதக் குழந்தையைத் தவிக்கவிட்டுச் சென்ற அந்தப் பெண், தனது பெற்றோருடன் வசிப்பதாகக் கூறிவிட்டு கள்ளக்காதலனுடன் வசித்து வந்துள்ளார்.
சமீபத்தில் தனது மனைவி கள்ளக்காதலனுடன் பேசிக்கொண்டிருந்தபோது, ராஜ்குமார் அவரது மொபைல் போனைப் பறித்துச் சோதித்துள்ளார். அதில் சில ஆபாசப் புகைப்படங்களும், முகநூலில் பகிரப்பட்டிருந்த சில கொலைச் செய்திகளும் இருந்துள்ளன. குறிப்பாக, அந்தச் செய்திகளில் “சிமெண்ட் மற்றும் டிரம்” என்ற வாசகம் இடம்பெற்றிருந்தது. மேலும் ராஜ்குமாரின் புகைப்படத்துடன் “நீல நிற டிரம் மற்றும் சிமெண்ட்” என்ற வாசகமும் இருந்ததைக் கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார்.
கடந்த 2025-ஆம் ஆண்டு மார்ச் மாதம், மீரட்டில் முஸ்கான் என்ற பெண் தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரைக் கொலை செய்து, உடலை 15 துண்டுகளாக வெட்டி, சிமெண்ட் நிரப்பப்பட்ட நீல நிற டிரம்முக்குள் வைத்து மறைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தனது மனைவியும் தன்னைக் கொலை செய்து இதுபோலவே டிரம்முக்குள் அடைக்கத் திட்டமிட்டுள்ளாரோ என்ற அச்சம் ராஜ்குமாருக்கு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து ராஜ்குமார் கூறுகையில், “தகராறு ஏற்படும் போதெல்லாம் நீல நிற டிரம்முக்குள் உன்னை அடைத்துவிடுவேன் என அவள் மிரட்டுவாள். சமையல் செய்யவோ, துணி துவைக்கவோ மாட்டாள். குழந்தையையும் சரியாகக் கவனிக்கவில்லை. மொபைல் போனைப் பறித்த பிறகு என்னையும் என் சகோதரர்களையும் கொன்றுவிடுவதாக மிரட்டினாள்” எனத் தெரிவித்தார்.
இச்சம்பவம் குறித்து காவல்துறை முன்னிலையில் நடந்த பேச்சுவார்த்தையின்போது, அந்தப் பெண் தனது கள்ளக்காதலனுடன் செல்லவே விருப்பம் தெரிவித்தார். மேலும் தனது உயிருக்கு ஆபத்து ஏற்படுவதைத் தவிர்க்க விரும்பிய ராஜ்குமார், மனைவியின் விருப்பப்படியே அவரை கள்ளக்காதலனுடன் அனுப்பி வைத்தார்.
