உத்தரப் பிரதேச மாநிலம் பஸ்தியில், ஆள் நடமாட்டம் மிகுந்த பகல் வேளையில் வீட்டின் உள்ளே புகுந்து, வெறும் 5 விநாடிகளில் காஸ் சிலிண்டரைத் திருடிச் சென்ற மர்ம நபரின் செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  பஸ்தி மாவட்டத்திலுள்ள கோட்வாலி பகுதியில் ராகுல் பால் என்பவர் வசித்து வருகிறார். கடந்த புதன்கிழமை மதியம் சுமார் 12 மணியளவில், இவரது வீட்டின் கதவு திறந்திருந்ததைக் கண்ட மர்ம நபர் ஒருவர் வீட்டிற்குள் புகுந்துள்ளார்.

அவர் நேராக சமையலறைக்குச் சென்று, அங்கிருந்த சிலிண்டரைத் தனது தோளில் தூக்கிக்கொண்டு கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பியோடினார். இந்த மொத்த திருட்டுச் சம்பவமும் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. திருடன் சிவப்பு நிற காலர் டி-ஷர்ட் மற்றும் கருப்பு நிற பேண்ட் அணிந்து, பார்ப்பதற்கு காஸ் சிலிண்டர் விநியோகம் செய்யும் ‘டெலிவரி பையன்’ போன்ற தோற்றத்தில் இருந்துள்ளார்.

வீட்டின் வெளியே நீண்ட நேரம் நோட்டமிட்ட அவர், சரியான வாய்ப்பு கிடைத்தவுடன் சிலிண்டரை மட்டும் இலக்காகக் கொண்டு திருடியுள்ளார். சமையலறையில் மற்ற விலையுயர்ந்த பொருட்கள் இருந்தும், முற்றத்தில் இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தும், அவர் எதையும் தொடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பாதிக்கப்பட்ட ராகுல் பால் இதுகுறித்து கூறுகையில், “தற்போது நிலவி வரும் தட்டுப்பாடு காரணமாக, பெரும் முயற்சிக்குப் பிறகு சாதாரண விலையை விட மூன்று மடங்கு கூடுதல் பணம் கொடுத்து இரண்டு நாட்களுக்கு முன்புதான் இந்த சிலிண்டரை வாங்கினேன். ஆனால் வாங்கிய மறுநாளே அது திருடப்பட்டுவிட்டது” என வேதனையுடன் தெரிவித்தார்.

https://x.com/priyarajputlive/status/2034833458951069949?s=20

அதாவது அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக, இந்தியாவில் எல்பிஜி சிலிண்டர்களுக்குக் கடுமையான தட்டுப்பாடு நிலவுவதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாகவே திருடர்கள் தற்போது எரிவாயு சிலிண்டர்களைக் குறிவைத்து திருடத் தொடங்கியுள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக ராகுல் பால் அளித்த புகாரின் அடிப்படையில் கோட்வாலி போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் திருடனை அடையாளம் காணும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாகவும், விரைவில் அவர் கைது செய்யப்பட்டு சிலிண்டர் மீட்கப்படும் என்றும் காவல் நிலையப் பொறுப்பாளர் மோதி சந்திரா தெரிவித்துள்ளார்.