விருதுநகர்: அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி, சாத்தூரை அடுத்து விருதுநகர் பாவாலி சாலையில் ஆயிரக்கணக்கான மக்களிடம் எழுச்சியுரை நிகழ்த்தினார். அப்போது அவர், “தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு அடியோடு சீர்கெட்டுவிட்டது.

சகோதரர்களின் சண்டையைத் தடுக்கச் சென்ற காவல்துறை அதிகாரி கொலை செய்யப்பட்டார். சப் இன்ஸ்பெக்டருக்கே இந்த நிலை என்றால் பொதுமக்கள் பாதுகாப்பை சிந்தித்துப் பாருங்கள். கடந்த 6 மாதங்களில் 6 காவலர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். போதைப் பழக்கத்தில் மூழ்கியவர்கள் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை போன்ற குற்றங்களில் தினமும் ஈடுபடுகிறார்கள். திருவள்ளூர் மாவட்டத்தில் மட்டும் 20 நாளில் 11 பாலியல் வன்கொடுமைகள் நடந்துள்ளன என்பது மிகப் பெரிய கேவலம்” என்று தெரிவித்தார்.

தொடர்ந்து அவர், “இப்படிப்பட்ட ஆட்சி தொடர வேண்டுமா? பலமுறை எச்சரித்தும் முதல்வர் ஸ்டாலின் கவனிக்கவில்லை. ஏனென்றால், விற்பனையே திமுகவினரின் தொழில். திமுக பொதுக்குழுவில் ஸ்டாலினே இதை ஒப்புக்கொண்டார். கட்சிக்காரர் செய்வதை அவரே வெளிப்படையாக கூறியுள்ளார். நாங்கள் சொல்லவில்லை, அவர் சொன்னதையே திருப்பி சொல்கிறேன்” என்றார்.

மேலும், “சேலம் மாவட்டம் ஆத்தூரில் நகைக்கடையில் நகை வாங்குவது போல நடித்து, நகைகளை வீசி திருடிவிட்டுச் சென்றனர். பெண்களுக்கும் பொதுமக்களுக்கும் பாதுகாப்பில்லை. ஸ்டாலின் மக்களைப் பார்க்கவில்லை, குடும்பத்தைப் பற்றித்தான் கவலைப்படுகிறார். குடும்பத்தினர் அதிகாரத்தில் வர வேண்டும் என்பதற்காகவே கம்பெனி நடத்துகிறார். நாட்டு மக்களின் பிரச்சனைகளை தீர்க்கத் தில்லே இல்லை. விலைவாசி உயர்வு, மின்கட்டணம் உயர்வு, தொழிற்சாலைகளுக்கு கட்டணம் உயர்வு ஆகியவற்றை குறைக்க வேண்டும் என மக்கள் என்னிடம் கோரிக்கை வைத்துள்ளனர்” என்றும் ஏபிஎஸ் தெரிவித்தார்.