நவி மும்பையில் நடந்த டி20 உலகக்கோப்பை பயிற்சி ஆட்டத்தில், இந்திய அணி தென்னாப்பிரிக்காவை 30 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அதிரடி காட்டியுள்ளது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியா மற்றும் திலக் வர்மா ஆகியோர் மைதானத்தின் நாலாபுறமும் பந்தைச் சிதறடித்தனர். இவர்களின் ருத்ரதாண்டவத்தால் இந்திய அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 240 ரன்கள் என்ற இமாலய இலக்கை எட்டியது. உலகக்கோப்பை தொடங்குவதற்கு முன்பே இந்திய பேட்ஸ்மேன்களின் இந்த ‘வெறித்தனமான’ ஃபார்ம் எதிரணிகளுக்கு மிகப்பெரிய எச்சரிக்கையாக அமைந்துள்ளது.
241 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணி, கடைசி வரை போராடியும் இந்தியப் பந்துவீச்சாளர்களின் துல்லியமான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறியது. அந்த அணியால் 20 ஓவர் முடிவில் 210 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் இந்திய அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. பயிற்சி ஆட்டம் என்றாலும், ஒரு பலமான அணிக்கு எதிராக இவ்வளவு பெரிய ஸ்கோரை அடித்திருப்பது இந்திய அணிக்கு மிகப்பெரிய தன்னம்பிக்கையைத் தந்துள்ளதாக கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
