சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நடத்தும் பத்தாவது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர், பிப்ரவரி 7-ஆம் தேதி இந்தியா மற்றும் இலங்கையில் கோலாகலமாகத் தொடங்குகிறது. கடந்த 2024-ஆம் ஆண்டு நடைபெற்ற தொடரில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்ற நிலையில், நடப்புச் சாம்பியன் என்ற அந்தஸ்துடன் சொந்த மண்ணில் களமிறங்குகிறது.
இதுவரை நடந்து முடிந்துள்ள 9 உலகக் கோப்பை தொடர்களில் இந்தியா, இங்கிலாந்து மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் தலா இரண்டு முறையும், பாகிஸ்தான், இலங்கை மற்றும் ஆஸ்திரேலியா தலா ஒரு முறையும் கோப்பையைக் கைப்பற்றியுள்ளன.
குறிப்பாக, 2007-இல் தோனி தலைமையிலான இந்திய அணி முதல் கோப்பையை வென்றதும், 2024-இல் ரோகித் சர்மா தலைமையில் இரண்டாவது முறையாகக் கோப்பையை வென்றதும் இந்திய கிரிக்கெட் வரலாற்றில் முக்கிய மைல்கற்களாகக் கருதப்படுகின்றன.
இந்த முறையும் கோப்பையைத் தக்கவைக்கும் முனைப்பில் இந்திய அணி தீவிரமாக உள்ள நிலையில், நியூசிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்கா போன்ற முன்னணி அணிகள் தங்களது முதல் வெற்றியைப் பதிவு செய்யப் போராடி வருகின்றன. இதுவரை நடைபெற்ற போட்டிகளில் நியூசிலாந்து 2021-இலும், தென் ஆப்பிரிக்கா 2024-இலும் இறுதிப் போட்டி வரை முன்னேறியும் கோப்பையை வெல்லும் வாய்ப்பைத் தவறவிட்டன.
பிப்ரவரி 7 முதல் மார்ச் 8 வரை நடைபெறவுள்ள இந்தத் தொடரில் மொத்தம் 20 அணிகள் பங்கேற்கின்றன. இந்தியாவின் மும்பை, டெல்லி, சென்னை, கொல்கத்தா, அகமதாபாத் ஆகிய நகரங்களிலும், இலங்கையின் கொழும்பு மற்றும் கண்டி ஆகிய இடங்களிலும் போட்டிகள் திட்டமிடப்பட்டுள்ளன.
மார்ச் 8-ஆம் தேதி நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் சாம்பியன் பட்டத்தை வெல்லப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு இப்போதே உலகெங்கிலும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களிடையே எழுந்துள்ளது.
