வேலூரில், உள்ளாட்சித் தேர்தலுக்குப் பயன்படுத்தப்படும் வாக்குப்பதிவு இயந்திரங்களை அங்குள்ள சமுதாயக் கூடத்தில் வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. உள்ளாட்சித் தேர்தலுக்கான முன்னேற்பாடுகளை மாவட்ட நிர்வாகமும் மாநகராட்சியும் தீவிரமாகச் செய்து வரும் நிலையில், அதற்கான வாக்குப்பதிவு இயந்திரங்களை ஏற்றி வந்த லாரியை அப்பகுதி மக்கள் திடீரென வழிமறித்து தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.
பொதுமக்கள் தங்களின் பல்வேறு சுபநிகழ்ச்சிகளுக்கும், பொதுப் பயன்பாட்டிற்கும் பயன்படுத்தி வரும் சமுதாயக் கூடத்தை, தேர்தல் பணிகளுக்காக மாற்றுப் பயன்பாட்டிற்கு எடுத்துக்கொள்ளக் கூடாது என்று கூறி மக்கள் இந்த அதிரடி போராட்டத்தில் இறங்கினர். இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்து வந்த சத்துவாச்சாரி காவல் துறையினர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள், போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் தீவிர பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு, சுமுகமான தீர்வு காண முயன்று வருகின்றனர்.
